வெள்ள நிவாரணப் பணி நடவடிக்கை குறித்து அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பாக, காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,

வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததால் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதக் கிறது. வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ள னர். 60 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதித்துள்ளது. சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் கிடைக்க வில்லை. மின் விநியோகமும் கிடையாது. உணவு இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சொந்த வீட்டிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லெண்ணம் கொண்டவர்களிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் குவி கின்றன. உரிய வழிகாட்டுதல் இல்லாததால் அவை மக்களைச் சென்றடையவில்லை. வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆளில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களை மீட்பதில் அரசு நிர்வாகம் முற்றிலுமாகத் தவறிவிட்டது. நிவாரணப் பணிகள் தொடர்பாக கடந்த 4-ம் தேதி அரசிடம் மனு கொடுத்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எனது மனுவைப் பரிசீலித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும். நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க சிறிய அளவில் குழுக்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இந்த மனுவை நேற்று விசாரித்து, “அடுத்த விசாரணையின்போது, தமிழகத்தில் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அட்வகேட் ஜெனரல் அல்லது கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.