தாமிரபரணி மகா புஷ்கரத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும்!
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா 12.10.2018 முதல் 23.10.2018 வரை நடைபெறுவதை முன்னிட்டு; போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட காவல்துறையினர் மூலம் போக்குவரத்துகளை முறைப்படுத்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது வாகனங் களை காவல்துறை மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாபநாசம் பகுதியில் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக அகஸ்தியர்பட்டியிலிருந்து பாபநாசம் கோவிலுக்கு தொடர்ச்சியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் போது தாமிரபரணி ஆற்றில் நீராட வரும் மக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடுவதற்கு ஆபத்தான பகுதிகளாக கண்டறியப் பட்ட இடங்களில் நீராட வேண்டாம் எனவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாhகள்.
தாமிரபரணி ஆற்றில் நீராடும் பொதுமக்கள் தங்களது ஆடைகளை ஆற்றில் விடுவதையும், சோப்பு சேம்பு போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துவதையும்
தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான வேள்விகள் நடைபெறும் யாகசாலைகளுக்கு தீயணைப்புத்துறையினரின் தடையின்மை சான்று பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வழிபாடுகளை மேற்கொள்ளவும், அன்னதானம் வழங்கப்படும் போது உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் மூலம் பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்து கொள்ளவும் தாமிரபரணி புஷ்கர விழா அமைப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தாமிரபரணி புஷ்கர விழாவைத் தொடர்ந்து நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திட காவல்துறையினரின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
– என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




