சுங்கச் சாவடி கட்டணம் ரத்து சலுகை 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

புது தில்லி:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடி மையங்களில் 11 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டார்.

இந்த சலுகை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல்வேறு நிவாரணப் பொருள்கள் அடங்கிய வாகனங்கள் சென்னை மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்வதால், பொதுமக்களின் நலன் கருதி மேலும் ஒருவார காலத்திற்கு (18 ஆம் தேதி வரை) தமிழக சுங்கச் சாவடிகளில், சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் இதற்கான அறிவிப்பை பொன்.ராதாகிருஷ்ணன் தில்லியில் நேற்று வெளியிட்டார்.