
கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற பிஎஃப்ஐ., அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக கேரள நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இன்று சமூகத் தளமான டிவிட்டரில் #BanPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.
தென் இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளத்தை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் அடிப்படைவாத அமைப்பு.
அந்த அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பின் தலைவரான கே.ஏ.ராவுப் ஷரீப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காவலை நீட்டிக்கக் கோரி கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனு ஏற்கப்பட்டு மேலும் மூன்று நாட்கள் அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இந்த மனுவில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ள தகவலில், பிஎஃப்ஐ அமைப்புக்கு வெளிநாட்டு நிதி பெருமளவில் குவிந்திருப்பது தெரியவந்துள்ளது.
பிஎஃப்ஐ அமைப்பு, பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013ல் இருந்து இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன. இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது.
தில்லியில் நடந்த சிஏஏ., – குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த அமைப்பு அதிக அளவில் பண உதவி செய்துள்ளது. தில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த வன்முறையின் பின்னணியில் இந்த அமைப்பு உள்ளது.

பெங்களூரில் நடந்த வன்முறையிலும் இந்த அமைப்பின் பின்னணி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசவிரோத, வன்முறை நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் மீதான பல்வேறு பண மோசடி வழக்குகளையும் விசாரித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது அமலாக்கத்துறை.
இதை அடுத்து, டிவிட்டர் பதிவுகளில் #BANPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகியுள்ளன.