
ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் உள்ள மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டு, அப்பலோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்…
இன்று நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அங்கு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து கடந்த 22ஆம் தேதி நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. அப்போது முதல் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவருக்கு கோவிட் 19 குறித்த எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால், தொடர் சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வீடு திரும்புன் முன்னர் ரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார். ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர வேறு எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. மருத்துவ ரீதியில் அவர் திடமாக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிறந்த நாள் அன்று கூட ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு, ஹைதரபாத்தில் சன் பிக்சஸ் தயாரிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார் ரஜினி காந்த்.