
வரும் 3ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. என் ஆதரவாளர்கள் கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று மு.க.அழகிரி தனது ஆதராளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 2021இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்று கூறியிருந்தார் மு.க.அழகிரி. இதை அடுத்து அவரது அந்தப் பங்களிப்பு என்ன என்று அறிவதில் ஊடகத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.
இது குறித்து அழகிரி செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அழகிரியும், ஓட்டு போடுவது கூட அரசியல் பங்களிப்புதான் என்று சொல்லிப் பார்த்தார். இருப்பினும், அவர் கட்சி தொடங்குவாரா, வேறு கட்சியில் சேருவாரா, கூட்டணி வைப்பாரா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஊடகத்தினர்.
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், அழகிரி அவர் பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப் படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது தாயாரை சென்னை கோபாலபுரத்தில் சந்தித்துப் பேசி, ஆசி பெற்றார். இதை அடுத்து அவர் திமுக.,வில் சேருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தாம் திமுக., பக்கம் சேரப் போவதில்லை என்றும், தமக்கு திமுக.,வில் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி.
இந்நிலையில், இன்று முக அழகிரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் இந்த ஆலோசனைக் கூட்டம் 2021 ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…
முக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் இருந்து ஆதரவாளர்களை அவர் வரவேற்றிருப்பதால், பரபரப்பு கூடியுள்ளது .
