தில்லியில் மத்திய, மாநில அரசுகள் டீசல் வாகனங்களை வாங்க தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புது தில்லி:

மத்திய மாநில அரசுகள் டீசல் வாகங்களை இனி வாங்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் மத்திய, மாநில அரசு அலுவலங்களில் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. இதனால் தலைநகர் தில்லியில் காற்றில் அதிக மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக பரவலாக கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

அதில், தில்லியில் மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய இலாகாக்களில் பயன்படுத்துவதற்கு இனி டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், அரசு இலாகாக்கள் வாங்கும் டீசல் வாகனங்கள் மீது எந்தப் பதிவும் இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசு அடைவதை தடுக்கும் வகையில் தில்லி மாநில அரசு ஒரு நாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்குவதற்கு கொண்டு வந்துள்ள திட்டம் அதன் நோக்கத்தை அடைய உதவாது; ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தால் தில்லி நகரவாசிகள் ஒவ்வொருவரும் 2 கார்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.