ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் : மக்கள் நலக்கூட்டணி

 
 
 
ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை இழந்துவிட்டதால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் மக்கள் நலக்கூட்டணியினர் கூறியுள்ளனர்.
 
மக்கள் நலக்கூட்டணியினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
 
தமிழ்நாட்டில் அரசு நிர்வாக இயந்திரம் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போனதால், மழை வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 26 ஆம் தேதிக்குப் பின்னர் வெள்ள அபாயம் கருதி, படிப்படியாகத் திறந்து விடாமல், கனமழையும், நீர்வரத்தும் அதிகமான பின்னர், ஒன்றாம் தேதி திடீரென்று அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தலைநகரமே மூழ்கி தத்தளிக்கும் விபரீதம் ஏற்பட்டது.
 
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதத்தின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசு குறைந்த பட்சம் ரூ. 50 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.10,560 கோடி மட்டும் தேவை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். மழை வெள்ளச் சேதத்தை முறையாகக் கணக்கெடுத்து மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அரசு நிர்வாகம் முடங்கி விட்டது.
 
இயற்கைப் பேரிடர் தாக்கியபோது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்து கிடப்பதால், முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டார். எனவே முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்டாக அறிக்கையில் வெளியிட்டனர்.