சென்னை: குட்கா முறைகேடு வழக்கில், குட்காவை விற்பனை செய்ய அனுமதி அளிக்க, அதிகாரிகள் மாதந்தோறும் ரூ. 2.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!
குட்கா முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகனின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலைக்கு உரிமம் மட்டுமே வழங்கியதாகவும், முறைகேடுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.
அதன் பின்னர் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தின் போது, 2013 முதல் 2015 வரை மாதம் ரூ. 2.50 லட்சம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர். இதற்கான ஆதாரம் உள்ளது என்றார்.
அவரது இந்தக் கருத்தைக் கேட்ட நீதிபதி, மாதம் இரண்டரை லட்ச ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக சிபிஐ குற்றச்சாட்டு இருப்பதால் தற்போது ஜாமின் வழங்க முடியாது என உத்தரவிட்டார்.
இதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, குட்கா வழக்கில் கைது செய்யப் பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்களான சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டன.




