மக்களை சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ் ஆப் மூலம் பேசுகிறார் : மு.க.ஸ்டாலின்

 
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா, வாட்ஸ்ஆப் மூலம் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியும், நிவாரணப்பொருட்கள் வழங்கியும் வருகிறார்.
 
சைதாப்பேட்டையில் உள்ள ஜோதியம்மன் நகர், கோதாமேடு, சீனிவாசா தியேட்டர், எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்த 14 ஆயிரம் பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, புடவை, லுங்கி, பாய் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.
 
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
செம்பரம்பாக்கம் ஏரியை மிகவும் தாமதமாக அதுவும் ஜெயலலிதாவின் உத்தரவுக்காக காத்திருந்து ஒரே நேரத்தில் 35,000 கனஅடி தண்ணீரை திறந்து விட்ட காரணத்தால் தான் சென்னை மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது தொடர்பாக தன்னால் பதில் சொல்ல முடியாததால் தவறான ஒரு தகவலை தலைமை செயலாளரை விட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா சொல்ல வைத்திருக்கிறார்.
 
நிவாரண நிதியையும், நிவாரண உதவிகளையும் மிகச் சிறப்பான வகையில் செயலாற்றி வரும் பொது நலச்சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி குழு மூலமாக கொடுத்தால் தான் முறையாக சென்றடையும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 
பாதிக்கப்பட்ட மக்களை ஒரு முறை கூட  சந்திக்காத ஜெயலலிதா அதையெல்லாம் மறைத்து விட்டு இன்றைக்கு மக்களுக்காக நான் மக்களால் நான் என்று சொல்லி கொண்டிருக்கிறார். மக்கள் அவர் மீது இப்போது கடும் கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டு தான் நேற்று 15-12-2015 சினிமாவில் வசனம் பேசுவது போல வாட்ஸ் ஆப்பிலும் வசனம் பேசியுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.