தில்லி மாணவி பாலியல் பலாத்கார குற்றவாளி சிறுவனை விடுவிப்பதில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி:

தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த சிறுவனை விடுவிப்பதற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தற்போது குற்றவாளி சிறுவனுக்கு வயது 21, ஆகும். அவன் வருகிற ஞாயிறு அன்று விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாணவி ஜோதி சிங்கின் தயார் ஆஷா தேவி, அவனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். “அவனை விடுதலை செய்தால், சமூகத்திற்கு நன்மையாக இருக்காது. அவனை விடுதலை செய்தால், அவனுடைய முகம் காட்டப்படவேண்டும்,” என்று கூறினார். இவ்விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கண்காணிப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார்.

இவ்விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுக்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

3 ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், இளங்குற்றவாளி திருந்தி விட்டான் என்றும், அவனால் சமூகத்துக்கு பிரச்னை ஏதும் இருக்காது என்றும் உறுதியாக தெரிகிற வரையில், அவனை விடுதலை செய்யக்கூடாது என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அதன் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது. தற்போது சுப்பிரமணிய சாமி மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுக்கள் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சுப்பிரமணிய சாமி எழுப்பிஉள்ள கருத்துக்கு பாராட்டு தெரிவித்து உள்ள உயர் நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் புதுதில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.

குற்றவாளிகளில் மிகவும் கொடூரமான குற்றத்தை சிறுவன அரங்கேற்றியதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ”மற்றவர்களை விட சிறுவனே மிகவும் கொடூரமான முறையில் குற்றம் புரிந்து உள்ளான். அவனுக்கு பேய்குணம் உள்ளது. புனர்வாழ்வு நடவடிக்கையில் அவன் சரியாக மாட்டான். இந்நாட்டில் எல்லோருக்கும் சட்டத்தின் மீது பயம் இருக்கவேண்டும், ஆதலால் அவன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாரதீய ஜனதனா எம்.பி. ஹேமமாலினி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.