முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி நடிகை ரோஜாவுக்கு ஓராண்டு தடை

 
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவுக்கு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஐதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குறித்து விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகள் தற்போது விஜயவாடாவில் தங்கியுள்ளனர். விஜயவாடாவில்தான் தற்போது 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து அட்டகாசம் செய்யும் கும்பல் நடமாடி வருகிறது.
 
இந்த கும்பல் 10 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுப்பார்கள். வட்டிக்கு பணம் வாங்குபவரின் மனைவி மற்றும் மகள்களிடம் புரோ நோட்டில் கையெழுத்து வாங்குகிறார்கள். வட்டி அசலும் கட்டாவிட்டால் குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளுகிறார்கள். இதில் ஆளுங்கட்சிசட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது.
 
சந்திரபாபு நாயுடு இருக்கும் விஜயவாடாவிலேயே இது நடக்கிறது. ஆனால் இதில் ஈடுபட்டுள்ள தங்கள் கட்சியினரை காப்பாற்றும் முயற்சியிலேயே சந்திரபாபு நாயுடு ஈடுபடுகிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு சிகாகோ தேசிய பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெறும் தகுதி சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை.அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த பல்கலைக்கழகம் தரம் தாழ்ந்து விட்டதா? அராஜக ஆட்சிக்கு வேண்டுமானால் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” என பேசியிருந்தார்.
 
இந்த நிலையில், முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவை ஒராண்டு இடை நீக்கம் செய்து சபாநாயகர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.