முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தனித்தனியே கடிதம் அனுப்பினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்கவும் தயார் எனவும் அக்கடிதத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இந்த வழக்கு விசாரணை 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணனிடம் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இந்த மாதத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்னால், 18 எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தங்க வைத்தது போன்று, டிடிவி தினகரன் தற்போது தன்னிடமிருக்கும் 18 ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஆளும் அதிமுக அரசு இழுத்துக் கொள்ளாமல் இருக்க, அனைவரையும் குற்றாலத்தில் தங்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.




