தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய 3 பேர் கைது : மகள் மீட்பு

 
 
தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய ருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து மகளை மீட்டனர்.
 
சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் கலையரசி (23). மருந்தாளுனர் படிப்பு முடித்து, சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
 
அவர் வியாழக்கிழமை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
மருந்துக் கடையும் பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் கேட்பாறின்றி நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
 
அப்போது ராமலிங்கத்தின் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
 
இந்த நிலையில் அவரை கடத்திச் சென்றதாக காவல் துறையினர் மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப்பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பரவலாக கூறப்படுகிறது.