spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி...

21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சி!

- Advertisement -

21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மனதின் குரல், 39ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 31.12.17, காலை 11.30 மணி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் இது, இன்று தான் இந்த ஆண்டின் கடைசி நாளும் கூட என்பது சந்தர்ப்பவசத்தால் அமைந்த ஒன்று.  ஆண்டு முழுவதிலும் நாம் பல விஷயங்களைப் பகிர்ந்து வந்துள்ளோம்.  மனதின் குரலுக்காக உங்களின் ஏராளமான கடிதங்கள், கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம், என்றுமே எனக்கு ஒரு புதிய சக்தியை அளிப்பதாய் இருந்து வந்திருக்கிறது.  சில மணி நேரங்கள் கழித்து, ஆண்டு மாறி விடும், ஆனால் நமது பகிர்வுகள், எப்போதும் போலவே தொடர்ந்து நடைபெற்று வரும்.

வரவிருக்கும் ஆண்டில் நாம் புதிய புதிய விஷயங்கள் குறித்துப் பேசுவோம், புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.  உங்கள் அனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  சில நாட்கள் முன்பாகத்தான் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.  பாரதத்திலும் மக்கள் நிறைந்த உற்சாகத்தோடு இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.  கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் ஏசுநாதரின் மகத்தான போதனைகளை நினைவில் இருத்திக் கொள்வோம்; அவர் மிக அதிகமாக ஒரு விஷயத்தின் மீது அழுத்தம் கொடுத்தார் என்றால், அது சேவை மனப்பான்மை தான்.  சேவை மனப்பான்மையின் சாரத்தை நம்மால் விவிலியத்திலும் கூடக் காண முடியும்.

The Son of Man has come, not to be served,

But to serve,

And to give his life, as blessing

To all humankind.

சேவையை ஏற்றுக் கொள்ள அல்ல, சேவை புரியவும், மனிதகுலம் அனைத்திற்கும் தன் வாழ்வை அளித்து ஆசிகள் வழங்கவும் தான் மனிதனின் குழந்தை பூமியில் அவதரித்தது என்பதே இதன் பொருள்.

சேவை மனப்பான்மையின் மகத்துவம் என்ன என்பதை இது நமக்குக் காட்டுகிறது.  உலகின் எந்தவொரு இனமாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், பாரம்பரியமாக இருந்தாலும், நிறமாக இருந்தாலும், சேவை மனப்பான்மை என்பது மனித விழுமியங்களின் விலைமதிப்பில்லாத அடையாளமாக இருக்கிறது.  நமது நாட்டில், ‘விருப்பு வெறுப்பற்ற செயல்’ பற்றிப் பேசுகிறோம், அதாவது அப்படிப்பட்ட செயல்பாட்டில் பிரதிபலன் பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் இருக்காது.  ‘सेवा परमो धर्म्:’, அதாவது சேவையே உன்னதமான அறம் என்று கூறப்பட்டிருக்கிறது.  ‘जीव सेवा ही शिव सेवा’ அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் கூறப்பட்டிருக்கிறது, இல்லையா?

குருதேவர் இராமக்ருஷ்ண பரமஹம்ஸர் கூறுவதுண்டு – சிவனுக்குப் புரியும் தொண்டாகவே உயிர்களுக்கு சேவை புரிய வேண்டும் அதாவது இவற்றிலிருந்து, உலகம் முழுமையிலும் மனித விழுமியங்கள் ஒன்று போலவே இருக்கின்றன என்பது புரிகிறது.  வாருங்கள், நாம் மகான்களைப் பற்றிய நினைவுகளை மனதில் தாங்கி, புனித நாட்களை உள்ளத்தில் இருத்தி, நமது இந்த மகத்தான விழுமியங்கள் அடங்கிய பாரம்பரியத்துக்குப் புதிய விழிப்புணர்வை அளிப்போம், புதிய சக்தி ஊட்டுவோம், அப்படிப்பட்ட வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சி செய்வோம்.

எனதருமை நாட்டுமக்களே, இந்த ஆண்டு குருகோவிந்த் சிங் பிறந்த 350ஆவது ஆண்டு.  குருகோவிந்த் சிங் அவர்களின் சாகஸமும் தியாகமும் நிறைந்த அசாதாரணமான வாழ்க்கை நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வற்றா ஊற்று.  குருகோவிந்த் சிங் அவர்கள் மகத்தான வாழ்க்கை- விழுமியங்கள் பற்றிய உபதேசத்தை அளித்தார், அந்த விழுமியங்களின் அடிப்படையில் அவர் தனது வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து காட்டினார்.

ஒரு குருவாக, கவியாக, தத்துவ ஞானியாக, மகத்தான போர்வீரனாக, குருகோவிந்த் சிங் அவர்கள் இந்த அனைத்துப் பங்களிப்புக்கள் வாயிலாக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் பணியைச் செய்தார்.  அவர் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போர் தொடுத்தார்.  இந்தப் போராட்டத்தில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை இழக்க நேரிட்டது.  மக்கள் சாதி, மதம் ஆகியவற்றின் தளைகளை அறுத்தெறியும் கல்வியை அளித்தார்.  ஆனால் அவர் எந்தக்காலத்திலும் மனவேற்றுமைக்குத் தன் மனதில் இடமளிக்கவில்லை.  வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அன்பு, தியாகம், அமைதி ஆகியவற்றையே செய்தியாக அளித்தார்;

எப்படிப்பட்ட மகத்தான சிறப்புத்தன்மைகள் நிறைந்த தனித்துவம் பார்த்தீர்களா?  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்னாசாஹிபில் நடந்த குருகோவிந்த் சிங் அவர்களின் 350ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபெறும் பேறு எனக்குக் கிட்டியது.  வாருங்கள், நாமனைவரும் குருகோவிந்த் சிங் அவர்களின் மகத்தான உபதேசம், அவரது கருத்தூக்கம் அளிக்கும் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முயல்வோம்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, அதாவது நாளை, என்னைப் பொறுத்தமட்டில் மிகச் சிறப்பான ஒரு நாள்.  புத்தாண்டுகள் வந்து செல்கின்றன, ஜனவரி மாதம் 1ஆம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது, ஆனால் சிறப்பான நாள் எனும் போது, அது உண்மையிலேயே சிறப்பானது தான்.  யாரெல்லாம் 2000ஆம் ஆண்டோ, அல்லது அதற்குப் பின்னர் பிறந்தார்களோ, அதாவது 21ஆம் நூற்றாண்டில் பிறந்தார்களோ, அவர்கள் 2018ஆம் ஆண்டு வாக்குரிமைத் தகுதி பெறும் வாக்காளர்களாக ஆகத் தொடங்கி விடுவார்கள்.

பாரதத்தின் மக்களாட்சி முறையில், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்களை, புதிய இந்தியாவின் வாக்காளர்களை நான் வரவேற்கிறேன்.  நமது இந்த இளைஞர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் சென்று உங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்பது தான்.  இந்தியா முழுவதும், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்கள் என்ற முறையில் உங்களுக்காக ஏங்கிக் கிடக்கிறது.  21ஆம் நூற்றாண்டின் வாக்களார்கள் என்ற வகையில், நீங்களுமேகூட கௌரவத்தை அனுபவிப்பீர்கள், இல்லையா!

உங்களது வாக்கு, புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும்.  வாக்கின் சக்தி, மக்களாட்சிமுறையின் மிகப்பெரிய சக்தி. இலட்சக்கணக்கானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த, வாக்கு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கருவி.  நீங்கள் வாக்களிக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக இருக்க மாட்டீர்கள்.  21ஆம் நூற்றாண்டின் உங்கள் பாரதம் எப்படி இருக்க வேண்டும்?  21ஆம் நூற்றாண்டு பாரதம் குறித்து உங்கள் கனவுகள் என்ன?  உங்களாலும் பாரதத்தின் 21ஆம் நூற்றாண்டின் நிறுவனர்களாக ஆக முடியும், இதற்கான தொடக்கம் தான் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று சிறப்பான வகையில் நடைபெற இருக்கிறது.

இன்றைய எனது மனதின் குரலில் நான் 18 முதல் 25 வயது நிரம்பிய, மனவுறுதியும், ஆற்றலும் படைத்த நமது போற்றத்தக்க இளைய சமுதாயம் பற்றிப் பேச விரும்புகிறேன். நான் இவர்களை NEW INDIA YOUTH, அதாவது புதிய இந்தியாவின் இளைஞர்களாகக் கருதுகிறேன். புதிய இந்தியாவின் இளைஞர்கள் என்றால், இளமை, உற்சாகம், ஆற்றல்.  நமது இந்த சக்திபடைத்த இளைஞர்களின் திறமையாலும், வல்லமையாலும் நமது புதிய இந்தியா என்ற கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாம் புதிய பாரதம் பற்றிப் பேசும் போது, புதிய பாரதம் சாதியம், மதவாதம், தீவிரவாதம், ஊழல் என்ற நஞ்சு ஆகியற்றிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்.  அசுத்தம் மற்றும் ஏழ்மையிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும்.  புதிய பாரதத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும், அனைவரின் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற வேண்டும்.  புதிய பாரதத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மட்டுமே நமக்கு வழிகாட்டும் சக்திகளாக இருக்க வேண்டும்.  எனது இந்த புதிய இந்திய இளைஞர்களே, முன்னே வாருங்கள், புதிய இந்தியாவை எப்படி அமைக்கலாம் என்று அலசி ஆய்வு செய்யுங்கள்.

தங்களுக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்ளும் அதே வேளையில், யார்யார் இணைந்திருக்கிறார்களோ, அவர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டுப்பயணத்தைத் தொடருங்கள்.  நீங்களும் முன்னேறுங்கள், தேசத்தையும் முன்னேற்றுங்கள்.  இப்போது உங்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாம் ஏன் பாரதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யக் கூடாது?  அங்கே 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஒன்றாக அமர்ந்து, புதிய இந்தியா பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம், வழிகளைத் தேடலாம், திட்டங்களை வகுக்கலாமே?

2022ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நமது தீர்மானங்களை எப்படி நிறைவேற்றுவது என்று சிந்திக்கலாமே?  நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு பாரதத்தை நிர்மாணிப்பது என்பது குறித்து ஆலோசிக்கலாமே?  காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் பேரியக்கமாக மாற்றினார்.

எனது இளைய நண்பர்களே, நாமும் 21ஆம் நூற்றாண்டின் உன்னதமான உயர்வான பாரதத்தை உருவாக்க ஒரு மக்கள் பேரியக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.  இது முன்னேற்றதுக்கான மக்கள் பேரியக்கம்.  வளர்ச்சிக்கான மக்கள் பேரியக்கம்.  வல்லமையும் சக்தியும் நிறைந்த பாரதத்தின் மக்கள் பேரியக்கம்.  ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை ஒட்டி தில்லியில் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்து, அங்கே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியாவை அமைப்பது என்பது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடலாமே?

மனவுறுதி மூலமாக வெற்றி காணல் என்பதை எப்படி அடைவது?  இன்று இளைஞர்கள் முன்பாக ஏராளமான புதிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.  திறன் மேம்பாடு தொடங்கி புதுமைகள் படைத்தல் மற்றும் தொழில்முனைவு வரை, நமது இளைஞர்கள் முன்னே வருகிறார்கள், வெற்றியும் கண்டு வருகிறார்கள்.  இந்த அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தரும் திட்டங்கள் பற்றிய தகவல்களை, புதிய இந்தியாவின் இளைஞர்களுக்கு ஓரிடத்திலேயே கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது; 18 வயது நிரம்பியவுடனேயே இளைஞர்களுக்கு இந்த உலகம் பற்றியும், இந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் இயல்பான முறையில் தகவல்கள் கிடைத்து, அவர்களுக்குத் தேவையான பலன்கள் நிறைய வேண்டும் என்ற வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

    எனதருமை நாட்டுமக்களே, கடந்த மனதின் குரலில் நான் positivity, ஆக்கப்பூர்வமான சிந்தனையின் மகத்துவம் குறித்துப் பேசியிருந்தேன்.  சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது –

उत्साहो बलवानार्य, नास्त्युत्साहात्परं बलम् |

सोत्साहस्य च लोकेषु न किंचिदपि दुर्लभम् ||

உற்சாகம் நிறைந்த ஒரு மனிதன் மிகவும் பலசாலியாக விளங்குகிறான் ஏனென்றால், உற்சாகத்தை விடப்பெரிய விஷயம் வேறொன்றுமில்லை, Positivity மற்றும் உற்சாகம் மேலிடும் ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்பது தான் இதற்குப் பொருள். ஆங்கிலத்திலும் ஒரு வழக்கு உண்டு – Pessimism leads to weakness, optimism to power.  அதாவது, முடியாது என்ற சோர்வு பலவீனம் தரும், முடியும் என்ற உற்சாகம் ஆற்றல் நிறைக்கும்.  2017ஆம் ஆண்டின் ஆக்கப்பூர்வமான கணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், நாம் 2018ஆம் ஆண்டை ஆக்கப்பூர்வமான சூழலில் வரவேற்போம் என்று கடந்த மனதின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் சமூகவலைத்தளங்களிலும், MyGovஇலும், NarendraModi Appஇலும் ஆக்கப்பூர்வமான பதில்களை அளித்திருக்கிறார்கள், பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.  Positive India hashtagஇலும் இலட்சக்கணக்கான ட்வீட்டுகள் செய்திருக்கிறார்கள், இது சுமார் 150 கோடிக்கும் அதிகமான மக்கள் வரை சென்றிருக்கிறது.

ஒருவகையில் positivityயின் இந்த பரவலாக்கம், பாரதத்தில் தொடங்கி உலகம் முழுமையும் பரவிவிட்டது.  வந்திருக்கும் ட்வீட்டுக்களும் பதில்களும் உண்மையிலேயே கருத்தூக்கம் அளிப்பவையாக அமைந்திருக்கின்றன.  இது ஒரு சுகமான அனுபவமாக எனக்கு இருந்தது.  நாட்டுமக்கள் சிலர், தங்கள் மனதில் சிறப்பான தாக்கத்தை, ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த ஆண்டு நிகழ்ந்த சில சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  சிலர் தங்கள் தனிப்பட்ட சாதனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் பெயர் மீனு பாட்டியா.  நான் தில்லியின் மயூர்விஹாரைச் சேர்ந்த பாக்கேட் ஒன், ஃபேஸ் ஒன்னில் வசிக்கிறேன்.  என் மகள் எம்.பி.ஏ. படிக்க விரும்பினாள்.  இதற்காக எனக்குக் கடனுதவி தேவைப்பட்டது, இது எனக்கு மிகச் சுலபமாகக் கிடைத்து விட்டது, எனது மகளும் படிப்பைத் தொடர முடிந்தது. 

எனது பெயர் ஜோதி ராஜேந்திர வாடே.  நான் (B) போடலில் வசிக்கிறேன்.  மாதம் ஒரு ரூபாய் தொகை செலுத்தும் விபத்துக்காப்பீட்டை எனது கணவர் செய்திருந்தார்.  விபத்தில் துரதிர்ஷ்டமாக அவர் உயிர் இழக்க நேரிட்டது.  அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை பற்றி எங்களுக்குத் தான் தெரியும்.  அரசின் உதவி காரணமாக எங்களுக்கு மிகுந்த பலன் கிடைத்தது, எங்களால் சற்று சுதாரித்துக் கொள்ள முடிந்தது.

எனது பெயர் சந்தோஷ் ஜாதவ்.  எங்கள் (BHINNAR) பின்னர் கிராமம் வழியே 2017ஆம் ஆண்டு தொடங்கி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது.  இதன் காரணமாக எங்கள் சாலைகள் மிகச் சிறப்பாக ஆகி விட்டன, எங்கள் வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கவுள்ளது.

எனது பெயர் தீபான்சு அஹூஜா, உத்திர பிரதேசத்தின் ஸஹாரன்புர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸாதத்கஞ்ஜ் பகுதியில் வசிக்கிறேன்.  நம் இராணுவத்தினர் நிகழ்த்திக் காட்டிய இரண்டு சம்பவங்கள் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின – ஒன்று பாகிஸ்தானத்தில் அவர்கள் செய்த surgical strike, இதனால் தீவிரவாதிகளின் launching padsஐ சின்னாபின்னப்படுத்த முடிந்தது, இரண்டாவதாக டோக்லாமில் நமது இராணுவத்தினர் வெளிப்படுத்திய ஈடு இணையில்லாத பராக்கிரமம்.

என் பெயர் சதீஷ் (BEVANI) பேவானீ.  எங்கள் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால், கடந்த 40 ஆண்டுகளாகவே நாங்கள் இராணுவத்தின் குடிநீர்க் குழாயையே நம்பி இருந்து வந்தோம். இப்போது தனியாக எங்களுக்கெனவே ஒரு குடிநீர்க்குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது…. இது எங்கள் 2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனை.

தத்தமது நிலைகளில் பலர் செய்யும் பல செயல்கள் காரணமாக, ஏராளமானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.  உண்மையில், இது தான் புதிய இந்தியா, இதைத் தான் நாமனைவருமாக இணைந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கிறோம்.  வாருங்கள்,  இந்தச் சின்னச்சின்ன சந்தோஷங்களோடு நாம் புத்தாண்டில் புகுவோம், புத்தாண்டைத் தொடக்குவோம், positive indiaவிலிருந்து progressive indiaவை நோக்கி – ஆக்கப்பூர்வமான இந்தியாவிலிருந்து, ஆக்கம்நிறைந்த இந்தியாவை நோக்கி உறுதியான அடியெடுத்து வைப்போம்.

நாமனைவரும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பற்றிப் பேசும் வேளையில், எனக்கும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.  கஷ்மீர் மாநில ஆட்சிப்பணித் தேர்வுகளில் தலைசிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற அஞ்ஜும் பஷீர் கான் கட்டக்கின் உத்வேகம் அளிக்கும் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

அவர் தீவிரவாதம், காழ்ப்பு ஆகியவற்றின் பிணையிலிருந்து வெளிப்பட்டு, கஷ்மீர் மாநிலத்தின் ஆட்சிப்பணித் தேர்வில் தலைசிறந்தவராக விளங்கியிருக்கிறார்.  1990ஆம் ஆண்டில், தீவிரவாதிகள் அவரது பூர்வீக வீட்டை எரித்து விட்டார்கள் என்பதை அறிந்து உங்களுக்குத் திகைப்பு ஏற்படும்.  தீவிரவாதமும் வன்முறையும் தாண்டவமாடிய வேளையில், அவரது குடும்பத்தார் தங்களின் முன்னோர் மண்ணைத் துறந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஒரு சின்னஞ்சிறிய பாலகன் வாழ்வில், அவனது நாலாபுறத்திலும் வன்முறைச் சூழல், மனதில் இருளையும், கசப்பையும் ஏற்படுத்தப் போதுமானது.  ஆனால் அஞ்ஜும் இவற்றைக் கண்டு அஞ்சவில்லை, தன் மனதில் அவை தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை.  அவர் என்றுமே நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டார் – மக்களுக்கு சேவை புரியும் பாதை அது.  அவர் விபரீதமான சூழல்களைத் தாண்டி வெளிவந்தார், தனது வெற்றிக்காதையை அவரே இயற்றிக் கொண்டார்.

இன்று அவர் ஜம்மு கஷ்மீரத்துக்கு மட்டுமல்ல, அனைத்திந்தியாவுக்குமே ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியவராகத் திகழ்கிறார்.  சூழல் எத்தனை தான் மோசமானதாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான செயல்கள் மூலமாக, ஏமாற்றமேற்படுத்தும் மேகங்களைக் கலைத்துக் கரைந்து போகச் செய்ய முடியும் என்பதை அஞ்ஜும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.  கடந்த வாரம் ஜம்மு கஷ்மீரத்தைச் சேர்ந்த சில பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.  அவர்கள் மனங்களில் இருந்த ஊக்கம், உற்சாகம், கனவுகள்…. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தெந்த துறைகளில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர்கள் எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்த மனத்தவர்களாக இருந்தார்கள்!!  அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் என் மனதில் சற்றுக்கூட ஏமாற்றத்தின் சாயலே படியவில்லை – உற்சாகம், ஊக்கம், சக்தி, கனவுகள், மனவுறுதி தான் பிரகாசித்தன.  அந்தப் பெண்களுடன் நான் செலவிட்ட கணங்கள், எனக்கு உத்வேகம் அளித்தன, இது தான் தேசத்தின் பலம், இவர்கள் தான் என் இளைய செல்வங்கள், இவர்கள் தான் என் தேசத்தின் எதிர்காலம்.

            எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் உலகின் பிரபலமான புனித இடங்கள் பற்றிய பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் கேரளத்தின் சபரிமலை கோயில் பற்றிய பேச்சும் இடம்பெறுவது இயல்பான விஷயம், இல்லையா!!

ஐயப்ப ஸ்வாமியின் அருளைப் பெற, உலகப்பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.  இந்த அளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இடத்தில், இத்தனை மகத்துவம் நிறைந்த இந்த புனிதத் தலத்தில், தூய்மையைப் பேணுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும்? மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே அமைந்திருக்கும் இத்தகைய இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது எத்தனை சிரமமானது என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.  ஆனால் தூய்மையை எப்படி, கலாச்சாரமாக மாற்றுவது, பிரச்சனையைத் தீர்க்கவொரு மார்க்கத்தை எப்படித் தேடுவது, மக்கள் பங்களிப்பை எப்படி சக்தியாக மாற்றுவது என்பதற்கு சபரிமலைக் கோயில் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

பீ. விஜயன் என்ற காவல்துறை அதிகாரி புண்ணியம் பூங்காவனம் என்ற ஒரு செயல்திட்டத்தைத் தொடக்கினார், இதன்படி, தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட ஒரு தூய்மை இயக்கத்தை ஆரம்பித்தார். வரும் யாத்ரீகர்கள் தூய்மைப் பணியில் உடல்ரீதியான ஏதாவது ஒரு பங்களிப்பை அளிக்கவில்லையென்றால், அவர்களது யாத்திரை நிறைவு பெறாது என்பது போன்றதொரு பாரம்பரியத்தை அவர் ஏற்படுத்தினார்.

இந்த இயக்கத்தில் பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ யாருமில்லை. ஒவ்வொரு யாத்ரீகரும், ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜை இது என்று கருதி, சிறிதளவேனும் நேரத்தைத் தூய்மைப்பணியில் ஒதுக்குகிறார்கள், பணியாற்றுகிறார்கள், மாசுகளை அகற்ற சேவையில் ஈடுபடுகிறார்கள்.  ஒவ்வொரு நாள் காலையும் இங்கே காணப்படும் தூய்மை நிறைந்த காட்சி, மிக அலாதியானதாக இருக்கிறது, அனைத்து தீர்த்தயாத்ரீகர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.  ஒருவர் எத்தனை தான் பெரிய பிரபலமாக இருந்தாலும், எத்தனை பெரிய செல்வந்தராக இருந்தாலும், எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு எளிய யாத்ரீகர் என்ற வகையில், இந்த புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நம் நாட்டுமக்களுக்கு இப்படிப்பட்ட அநேக எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன.

சபரிமலையில் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ள இந்த புண்ணியம் பூங்காவனம் இயக்கம், ஒவ்வொரு யாத்ரீகரின் யாத்திரையிலும் இணைபிரியா அங்கமாகி விட்டது.  அங்கே கடினமான விரதங்களுடன் கூட, தூய்மை தொடர்பான உறுதியான தீர்மானமும் இணைந்தே பயணிக்கிறது.

என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியண்ணலின் பிறந்தநாளன்று நாமனைவரும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டோம்; அண்ணலின் நிறைவடையாத பணி அதாவது தூய்மையான பாரதம், மாசிலிருந்து விடுபட்ட பாரதம்.  அண்ணலின் வாழ்க்கை முழுவதும் இந்தப் பணிக்காகவே அவர் செலவிட்டார், முயற்சிகள் மேற்கொண்டார்.

அண்ணலின் 150ஆவது பிறந்த நாளன்று நாம் அவர் கனவு கண்ட பாரதமான, தூய்மையான பாரதத்தை அவருக்குச் சமர்ப்பிப்போம், அந்த திசையில் நம் பங்களிப்பை அளிப்போம் என்று தீர்மானித்திருந்தோம்.  தூய்மையை நோக்கிய திசையில் தேசம் முழுக்க, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பரவலான வகையில் மக்கள்-பங்களிப்புத் துணையால் மாற்றம் காணப்பட்டு வருகிறது.

நகர்ப்புறப்பகுதிகளில் எட்டப்பட்டிருக்கும் தூய்மையின் தரநிலையை அளவிட, வரவிருக்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் மார்ச் 10 வரை स्वच्छ सर्वेक्षूण 2018, தூய்மை ஆய்வு 2018 என்ற பெயரிலான, உலகின் மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.  இந்த ஆய்வு, 4000த்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 40 கோடி மக்களை உள்ளடக்கிச் செய்யப்படும்.

நகரங்களில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுபடுதல், குப்பைகள் சேகரிப்பு, குப்பைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அமைப்பு, அறிவியல்ரீதியாக குப்பைகளைப் பதப்படுத்தல், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த செய்யப்படும் முயற்சி, திறன் உருவாக்கமும், தூய்மைக்காக செய்யப்பட்டிருக்கும் புதுமையான முனைவுகளும், இந்தப்பணியில் மக்கள் பங்களிப்பு ஆகியன இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படும் அளவீடுகளாக இருக்கும்.

இந்த ஆய்வின்படி, வேறுவேறு குழுக்கள் நகரங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.  குடிமக்களிடம் பேசி அவர்களிடமிருந்து பதில்களைப் பெறுவார்கள்.  தூய்மைச் செயலியின் பயன்பாடு மற்றும் பல்வேறு வகையான சேவை மையங்களின் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வார்கள்.  நகரின் தூய்மை என்பதை மக்களின் இயல்பாக, நகரின் இயல்பாக ஆக்கும் வகையில் அனைத்து அமைப்புக்களும் நகரங்களாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதும் கருத்தில் கொள்ளப்படும்.  தூய்மை என்பதை அரசு மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பது அல்ல.  ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமக்கள் அமைப்புக்களுக்கும் இதில் பெரும்பங்கு இருக்கிறது.

இனிவரும் நாட்களில் தூய்மை பற்றிய ஆய்வு நடைபெற இருக்கிறது, இதில் நீங்களெல்லாரும் முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பதே நான் ஒவ்வொரு குடிமகன் முன்பாக வைக்கும் விண்ணப்பம்.  உங்கள் நகரம் பின்தங்கிவிடக் கூடாது, உங்கள் தெருவோ பகுதியோ பின்தங்கிப் போய்விடக் கூடாது என்று எண்ணி நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

வீடுகளில் மக்கும் குப்பைக்கென பச்சைக் குப்பைத்தொட்டியும், மக்காக் குப்பைக்காக நீலக் குப்பைத்தொட்டியும், இப்போது உங்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.  குப்பைகளைப் பொறுத்தமட்டில், reduce – குறைத்தல், re-use – மறுபயன்பாடு மற்றும் re-cycle – மறுசுழற்சிக் கோட்பாடு ஆகியன மிகவும் பயனுடையதாக இருக்கும்.

இந்த ஆய்வின் அடிப்படையில் நகரங்களின் தரநிலை நிர்ணயம் செய்யப்படும் போது, உங்கள் நகரத்தில் மக்கள் தொகை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், தேச-அளவிலான தரநிலையும், ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டதாக இருந்தால், பகுதி அளவிலான தரநிலையும் அளிக்கப்படும்; இதில் உங்கள் நகரம் மிகச்சிறப்பான தரநிலையை எட்ட வேண்டும் என்பதே உங்கள் கனவாக இருக்க வேண்டும், இதை நோக்கியே உங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2018ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மை குறித்த ஆய்வில், தூய்மை தொடர்பான இந்த ஆரோக்கியமான போட்டியில் நீங்கள் பின்தங்கிப் போகக் கூடாது என்பதே ஒரு பொதுவான விவாதப் பொருளாக ஆக வேண்டும்.  எங்களது நகரம், எங்களது முயற்சி; எங்களது முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் என்பதே உங்களனைவரின் கனவாக இருக்க வேண்டும்.

வாருங்கள், இந்தத் தீர்மானத்தோடு நாம் மீண்டும் ஒருமுறை அண்ணலை நினைவில் இருத்தி, தூய்மையான பாரதம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டு, மனோதிடத்துடன் செயலில் ஈடுபடுவோம்.

என் பாசம்மிகு நாட்டுமக்களே, சில விஷயங்கள் பார்க்கச் சிறியனவாக இருக்கலாம், ஆனால் சமுதாயரீதியாக நமது அடையாளம், தொலைவான இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக அமைந்து விடுகின்றன.  இன்று மனதின் குரலில், இந்த நிகழ்ச்சி வாயிலாக நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

யாராவது ஒரு இஸ்லாமியப் பெண், ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பினால், அவர் ‘மஹ்ரம்’ அல்லது தனது ஆண் காப்பாளர் இல்லாமல் செல்ல முடியாது என்ற விஷயம் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இதைப்பற்றி நான் முதன்முறையாகக் கேள்விப்பட்ட போது, எப்படி இப்படி இருக்க முடியும்?  இப்படிப்பட்ட விதியை யார் ஏற்படுத்தி இருப்பார்கள்?  ஏன் இந்தப் பாகுபாடு என்றெல்லாம் தோன்றியது.  இதை நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த வேளையில், எனக்குத் திகைப்பு ஏற்பட்டது – சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய கட்டுப்பாட்டை விதித்திருப்பவர்கள் நாம் தானே!

பல ஆண்டுகளாகவே இஸ்லாமியப் பெண்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு வந்திருக்கிறது, ஆனால் இது பற்றிய எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை.  இப்படிப்பட்ட விதிமுறை பல இஸ்லாமிய தேசங்களில் கூடக் கிடையாது.   ஆனால் பாரதத்தின் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.  நமது அரசு இதன் மீது கவனம் செலுத்தியது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  நமது சிறுபான்மையினர்நல அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 70 ஆண்டுக்காலமாக தொடர்ந்துவந்த பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி விட்டது.

இன்று இஸ்லாமியப் பெண்கள், ‘மஹ்ரம்’ என்ற ஆண் காப்பாளர் இல்லாமலேயே கூட ஹஜ் யாத்திரை செல்ல முடியும், இந்த முறை 1300 இஸ்லாமியப் பெண்கள் ஆண் காப்பாளர்கள் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  கேரளம் முதல், வட இந்தியா வரை, தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி தனியே யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிப்பதை உறுதி செய்ய சிறுபான்மையினர்நலஅமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  பொதுவாக ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; ஆனால் தனியே செல்ல விரும்பும் பெண்களை இந்தக் குலுக்கல் முறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அவர்களை தனிச்சிறப்பான பிரிவாகக் கருதி, வாய்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பாரதத்தின் வளர்ச்சிப் பயணம், நமது பெண்கள் சக்தியின் பலத்தாலும், அவர்களின் அறிவுத்திறத்தாலும் தான் முன்னேற்றம் கண்டு வருகிறது, மேலும் முன்னேற்றம் காணவிருக்கிறது என்பதை நான் முழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறேன், இது என் மனவுறுதிப்பாடு.  ஆண்களுக்குச் சரிநிகராக அதிகாரங்களும், வாய்ப்புக்களும் பெண்களுக்கும் கிட்ட வேண்டும் என்பதை நோக்கியே நமது நீடித்த முயற்சி அமைய வேண்டும்; அவர்களும் வளர்ச்சிப் பாதையில் அப்போது தான் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பார்கள்.

எனதருமை நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 26ஆம் தேதி நமக்கெல்லாம் வரலாற்றுரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள்.  ஆனால் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி, சிறப்பான வகையில் நினைவில் கொள்ளப்படும். இந்த ஆண்டு குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் ஆசியான் அமைப்பில் இருக்கும் பத்து நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினர்களாக பாரதம் வரவிருக்கிறார்கள்.

குடியரசுத் திருநாளன்று, இந்த முறை ஒருவரல்ல, பத்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பார்கள்.  பாரதத்தின் வரலாற்றில் இது போன்று இதுவரை நடந்ததே இல்லை.  2017ஆம் ஆண்டு, ஆசியான் அமைப்புக்கும் பாரதத்துக்கும் சிறப்பானதாக அமைந்தது.  ஆசியான் அமைப்பு தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது, 2017ஆம் ஆண்டில் தான் ஆசியான் அமைப்புடனான பாரதத்தின் கூட்டு 25 ஆண்டுகளை எட்டியது.  ஜனவரி மாதம் 26ஆம் தேதி உலகின் 10 நாடுகளைச் சேர்ந்த இந்த மகத்தான தலைவர்கள் ஒன்றாக இங்கே பங்கேற்பார்கள் என்பது பாரதவாஸிகளான நம்மனைவருக்குமே ஒரு பெருமைக்குரிய விஷயம்.

  பிரியமான நாட்டுமக்களே, இது பண்டிகளைகளின் பருவம்.  பார்க்கப் போனால் நமது தேசமே பண்டிகளைகளின் தேசம் தான்.  மிக அபூர்வமாகத் தான் ஏதோ ஒரு நாளன்று எந்தப் பண்டிகையும் இல்லாமல் இருக்கும்.  இப்போது தான் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினோம், அடுத்து, புத்தாண்டு பிறக்கவிருக்கிறது.

வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் ஏராளமான சந்தோஷங்கள், சுகங்கள், நிறைவு ஆகியவற்றை அள்ளி இறைக்கட்டும்.  நாமனைவரும் புதிய தெம்பு, புதிய உற்சாகம், புதிய ஊக்கம், புதிய தீர்மானத்தோடு முன்னேறுவோம், தேசத்தையும் முன்னேற்றுவோம்.  ஜனவரி மாதம் சூரியனின் உத்தராயணப் புண்ணிய காலம், இந்த மாதத்தில் தான் மகர சங்கராந்தி கொண்டாடப்படும்.  இது இயற்கையோடு இணைந்த காலம்.

சொல்லப் போனால், நமது ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு இணைந்தே இருக்கின்றது என்றாலும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில், இயற்கையின் இந்த அற்புதமான நிகழ்வை பல்வேறு வகைகளில் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது.  பஞ்சாபிலும் வடமாநிலங்களிலும் லோஹ்டீயின் ஆனந்தம் பெருக்கெடுக்கிறது என்றால், உத்திரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் கிச்சடீ மற்றும் தில் சங்க்ராந்தி வருவது எதிர்நோக்கப்படுகிறது.  ராஜஸ்தானில் ஸங்க்ராந்த் என்பார்கள், அஸாமில் மாக்-பிஹூ என்பார்கள், தமிழ்நாட்டில் பொங்கல் எனப் போற்றுவார்கள் – இவை அனைத்தும் தங்களுக்கே உரிய சிறப்புத்தன்மைகள் பெற்றவை, இவற்றுக்கென பிரத்யேகமான மகத்துவம் இருக்கின்றது.

இந்த அனைத்துப் பண்டிகைகளும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்கு இடையிலும் கொண்டாடப்படுகின்றன.  பெயரளவில் இவை வேறுபட்டிருந்தாலும், இவற்றின் அடிநாதமாக விளங்கும் தத்துவம் என்னவோ ஒன்று தான் – இயற்கையுடனும், விவசாயத்துடனான பிணைப்பு.

நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள்.  மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.

மிக்க நன்றி அன்புநிறை நாட்டுமக்களே.  நாம் மீண்டும் 2018ஆம் ஆண்டில் சந்திப்போம். நன்றி.

தகவல்: ஆலிண்டியா ரேடியோ, சென்னை வானொலி நிலையம்

தமிழாக்கம், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe