மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதுரை:

மோடியால் காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது; நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் மதுரையில் சனிக்கிழமை இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது. மோடி பல நாட்கள் வெளிநாட்டிலும், சில நாட்கள் இந்தியாவிலும் இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அந்த சில நாட்களிலும் மக்கள் நலப்பணி குறித்து சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அரசியலை மூலதனமாகக் கொண்டு சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், நாட்டிற்காக தமது சொத்துக்களையே இழந்தவர்கள் நேரு குடும்பத்தினர். அத்தகைய நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை என்று பேசினார் இளங்கோவன்.