நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன்

புது தில்லி:

நேஷனல் ஹெரால்ட் வழக்கில், ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையில் சோனியா, ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தனிநபர் ஜாமீனில் ஏ.கே. அந்தோணி, பிரியங்கா ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜரான காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 4 பேருக்கும் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து சோனியா மற்றும் ராகுல் தரப்பில் தலா ரூ.50 ஆயிரம் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

சோனியா காந்திக்கான தனிநபர் ஜாமீன் பத்திரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி கையெழுத்திட்டார். ராகுலுக்கான ஜாமீன் பத்திரத்தில் அவரது தங்கை பிரியங்கா கையெழுத்திட்டார். இதையடுத்து இருவருக்கும் பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வழக்கு விசாரணை 2016ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து சோனியாவும், ராகுலும் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும், பத்திரிகையாளர்களும் குவிந்தனர். இதனால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.