பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிபுணன்- படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் கூறியிருந்தார். மீடூ விவகாரத்தில் சினி உலக பெண்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளினூடே நடிகை ச்ருதி ஹரிஹரனும், நெருக்கமான காட்சிகளின் போது தொடக் கூடாத இடங்களை நடிகர் அர்ஜூன் தொட்டதாக புகார் கூறியிருநதார்.
நடிகை ஸ்ருதியின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அர்ஜூன் அவருக்கு எதிராக பெங்களூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுத்தார். நடிகை ஸ்ரு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நடிகர் அர்ஜூன் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூர் காவல் நிலையம் சென்றார். நடிகர் அர்ஜூன் மீது பாலியல் சீண்டல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிபுணன் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறியிருந்தார். மேலும் 2015 டிசம்பர் மாத படப்பிடிப்பின் போதும் நெருக்கமான காட்சிகளில் நடிகர் அர்ஜூன் தன்னிடம் வரம்பு மீறியதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து 2016ம் ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பின் போது தன்னை பின்புறமாக வந்து கட்டிப்பிடித்து அறைக்கு தனியாக வருமாறு அர்ஜூன் வலியுறுத்தியதாக ஸ்ருதி தனது புகாரில் கூறியுள்ளார். இதை அடுத்து, நடிகர் அர்ஜூன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




