முதல்வர் பதவி- எங்கள் நிலையில் மாற்றம் இல்லை: தினமணி செய்தி தவறானது என பாமக விளக்கம்

 

முதல்வர் பதவி விவகாரத்தில், எங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமணி செய்தி தவறானது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

இன்றைய தினமணி நாளிதழின் அரசியல் அரங்கம் பகுதியில் ‘பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’ என்ற தலைப்பில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. அந்த நேர்காணலில் ‘‘உங்களை மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும்?’’ என்று என்னிடம் வினா எழுப்பப்பட்டதாகவும், அதற்கு,‘‘கூட்டணி என்று ஏற்படும்போது அதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். யார் முதல்வர் என்பதல்ல பிரச்னை. திமுக, அதிமுகவுக்கு மாற்று ஏற்படுத்துவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்!’’ என்று நான் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நான் தில்லியில் இருந்த போது தினமணி நாளிதழின் செய்தியாளர் என்னை சந்தித்து நேர்கண்டார். அப்போது முதலமைச்சர் வேட்பாளர் குறித்த வினாவுக்கு விடையளிக்கும் போது,‘‘ இரு விஷயங்களில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை. முதலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. இரண்டாவதாக முதலமைச்சர் வேட்பாளராக கட்சித் தலைமை என்னை ஒருமனதாக ஏற்கனவே அறிவித்து, கடந்த 10 மாதங்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவரும் நிலையில், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. அதேநேரத்தில் துணை முதலமைச்சர் பதவி, கூட்டணி ஆட்சி ஆகியவற்றுக்கு பா.ம.க. தயாராக இருக்கிறது. இதுபற்றியெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’’ என்று தான் நான் குறிப்பிட்டேன்.

‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையையும், மருத்துவர் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராகவும் ஏற்றுக் கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா பலமுறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இது தான் பா.ம.க.வின் உறுதியான நிலைப்பாடு. இதில் எவ்வித மாற்றத்திற்கும், சமரசத்திற்கும் இடமில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று அதில் கூறியுள்ளார்.