தமிழக அரசு தலைமை செயலாளராக சகாயம் ஐ.ஏ.எஸ் நியமனம் ?

 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர். “எங்களின் முதல்வர் சகாயம்” என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னையில் எழுச்சிப் பேரணி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அரசியல் கட்சியினரும் அரசியல் ஆதாயம் பெறும் நோக்குடன் சகாயம் ஐ.ஏ.எஸ்-ன் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக அரசு தலைமை செயலாளராக சகாயம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்படுவார் எனும் தோற்றத்தை இன்றைய இளைய தலைமுறையினர் மனதில் உருவாக்கி அவர்களின் ஆதரவையும் பெற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்து ஒரு முயற்சியிலும் தேமுதிக-வினர் செயல்பட்டு வருகின்றனர்.
 
தேமுதிக-வினர் நேர்மையான ஆட்சி எனும் தலைப்பில் ..
விஜயகாந்த் புகைப்படத்தை போட்டு முதல்வர் என்றும் சகாயம் ஐ.ஏ.எஸ். புகைப்படத்தை போட்டு தலைமை செயலாளர் என்றும் பதிவிட்டு அதனை ஒரே புகைப்படமாக உருவாக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக பரவ விட்டுள்ளனர்.
 
அந்த புகைப்படத்துடன் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
முதல்வர் கேப்டன் விஜயகாந்த்
தலைமை செயலாளர் சகாயம் IAS
 
இது சாத்தியா? என்றால் இதுதான் சாத்தியம் என்றே தோன்றுகிறது, காரணம் ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை அழிப்பேன் என நாம் எதிர்பார்க்கும் அரசியலை தருவேன் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…
 
லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்று நாம் எதிர்பார்க்கும் அதிகாரியாக திகழ்கிறார் சகாயம் IAS
 
ஒவ்வொரு தனி மனிதனும் சுய வேலை வாய்ப்பின் மூலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் சுயதொழில் உபகரணங்களை மாவட்டம்தோறும் மக்கள் பணி என்ற கோஷத்துடன் கொடுத்து நல்ல அரசியல் தலைவராக திகழ்கிறார்…
 
மாவட்ட ஆட்சி தலைவராக உழவர் உணவகம் மூலம் ஏர் ஓட்டும் விவசாயிகளை கார் ஓட்ட செய்து சிறந்த அரசு ஊழியராக திகழ்கிறார்…
 
எதிர்க்கட்சி தலைவராய் அரசின் அத்துமீறல்களை, அலட்சியங்களை தட்டிக் கேட்டதால் பல அவதூறு வழக்குகளை சந்தித்து நீதிமன்றங்களில் உண்மையை நிலைநாட்டினார்…
 
தனது கடமையை செய்யக் கூட நீதிமன்றங்களின் தயவை நாட வேண்டியுள்ளது…
 
சரி, விஜயகாந்த் முதல்வர் என்றால் சகாயம்தான் தலைமை செயலாளர் என்பதற்கு என்ன உறுதி?
 
விஜயகாந்த் அவர்களின் வார்த்தை வெளிப்பாடுகளில் தெளிவு சிதறினாலும் அவர் கூறும் கருத்துக்கள் சிந்திக்கக் கூடியதாக, நல்ல நிர்வாகத்திற்கு அடையாளமாக இருப்பதை நாம் புறந்தள்ள முடியாது,
 
செப்டம்பர் 27ம் நாள் தனது முகநூலில் திரு. விஜயகாந்த் அவர்கள் DMDK will support the honest officials for ever என்று குறிப்பிட்டுள்ளதோடு அல்லாமல் 2016ல் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தில் ஊழலற்ற நேர்மையான அதிகாரிகளை இனம் கண்டு துணையாக இருப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்…
 
பொதுவாக விஜயகாந்த் எவரையும் குறையோ பாராட்டோ எளிதில் வெளிக் காட்டுவதில்லை. ஆனால் திரு. சகாயம் அவர்களை பாராட்டியதோடு தனது இயக்கம் துணை நிற்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்…
 
எனவே இல்லாத அரசியல்வாதி சகாயத்தை பூதக்கண்ணாடி போட்டு தேடுவதைவிட, இருக்கின்ற நல்ல தலைவரான விஜயகாந்த் அவர்களை தேர்ந்தெடுத்து நாட்டினை சீர்செய்வோம்…
 
மக்கள் விரும்புகின்ற நேர்மையான அரசியலுக்கு, வெளிப்படையான நிர்வாகத்திற்கு…
 
முதல்வர் விஜயகாந்த்..
தலைமை செயலாளர் சகாயம்…
 
மக்களின் எண்ணமாக, இளைஞர்களின் கோஷமாக மாறவேண்டும்…
 
விஜயகாந்த் அவர்களை தேர்ந்தெடுத்து “தெறி”க்கவிடுவோம்…
 
எனக் கூறி தகவலை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர் தேமுதிக-வினர்.