ஜல்லிக்கட்டு தடை நீடிக்க அதிமுக, திமுக கட்சிகளே காரணம் : விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது

அதிகஅளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத்தடுத்தல் சட்டத்தில்” திருத்தம்கொண்டுவந்து, அதை ஏன்
நிறைவேற்ற முடியவில்லை?

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு, அதற்கு தடை, தடையென சுமார் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிகளுமே காரணமாகும். ஆனால் தற்போதுதான் தடை விதித்தது போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகிறது. பாரத பிரதமர் ரஷ்யா நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்லும்போதும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டுமென, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது “மக்கள் காதில் பூச்சுற்றவே” எனத்தெரிகிறது. பிரதமர் வெளிநாடு செல்வதும் மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைவதும் குறித்து, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திககளை வெளியிட்டுள்ள நிலையில், மக்களை ஏமாற்றவே தற்போது பாரத பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிர்பயா வழக்கிற்காக, “சிறுவர்கள் குற்ற நீதி சட்டத்தில்” திருத்தம் கொண்டுவரப்பட்டு, அந்த திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதிக அளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டத்தில்” திருத்தம் கொண்டுவந்து, அதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? “தும்பைவிட்டு வாலை பிடிப்பதுதான்” ஜெயலலிதாவிற்கு வழக்கமோ? பிரதமர் இந்தியாவில் இருக்கும்போது கடிதம் எழுதவில்லை, பாராளுமன்றம் நடைபெறும்போது அவசர சட்டதிருத்தம் கொண்டுவர முயற்சி எடுக்கவில்லை. ஆனால் எல்லாம் முடிந்தபின், தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு ஏன் இந்த நாடகம்? ஜல்லிக்கட்டிற்காக தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

ஆனால் இதையெல்லாம் செய்யாத தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டபோது, 2015ல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமென்று இறுமாப்புடன் பேசினார். ஆனால் 2016ல்கூட ஜல்லிக்கட்டை நடத்துவதற்கோ, அதன்மீதான தடையை நீக்குவதற்கோ இதுவரை எந்த ஒரு துரும்பையும் எடுத்துப்போட்டதாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அதற்கு மாறாக எதுவும் செய்ய இயலாது என தற்போது வியாக்கியானம் பேசுகிறார். இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசி தமிழக மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா, நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எல்லாம் உச்சந்தலையில் வைத்து கொண்டாடுபவரா? தனக்கு சாதகமான தீர்ப்பை தலையிலே வைப்பதும், பாதகமான தீர்ப்பை தரையிலே போடுவதும்தானே அவரது வழக்கம். தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு திராணி இருந்தால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தந்திருக்கவேண்டும். இல்லையென்றால் மத்திய அரசிடம் தனது அதிமுக எம்.பிக்கள் மூலம் வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக் காளையை, “பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப்பிரிவு 22ன்” பட்டியலில் இருந்தாவது விடுவித்திருக்கவேண்டும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படாமல், முடங்கிப்போய் இருப்பதால்தான், எதையுமே செயல்படுத்தமுடியாத அரசாக அதிமுக அரசு இருக்கிறது.

55 மாதம் ஆட்சியில் இருந்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு எதையும் செய்யாமல், ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை பார்த்து பயந்துபோய், சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவேண்டும் என்பதற்காக, “தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்தெழுந்தது போல்” இவர் காலம் கடந்து செய்யும் செயலை, மக்கள் நாடகமாகத்தான் பார்கிறார்கள். இந்த நாடகத்தைக்கண்டு மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வருகின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்திடவேண்டும் என்பதில் தேமுதிக உறுதியோடு இருக்கிறதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்