நாங்களா கூப்பிடுகிறோம்.. குடிக்க வாங்க என்று..! என கேட்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி!!
மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்றும், அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தவறான தகவல் அளித்துள்ளார் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
முன்னதாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
அதற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாள் அன்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தன. இந்நிலையில், தீபாவளியையொட்டி தமிழகத்தில் 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது
இதில் நவ.3 ம் தேதி ரூ.124 கோடியும், நவ 4ம் தேதி ரூ.148 கோடியும், நவ.5ம் தேதி ரூ.150 கோடியும் மற்றும் நவ.6 ம் தேதி ரூ.180 கோடியும் என 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டைவிட தீபாவளியின் போது மது வருவாய் 34% அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.




