சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா விஜயகாந்த், தற்போது நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளியான படம் சர்கார். அதில் தமிழக அரசின் இலவச திட்டங்களைக் குறை கூறி, இலவசப் பொருள்களை எரித்து வசனம் அமைக்கப் பட்டிருக்கிறது என்றும், ஜெயலலிதாவின் பெயரை தவறான கதாபாத்திரத்துக்கு உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருப்பதாகவும் பிரச்னை எழுந்தது. ஆளும் அதிமுக.,வினரின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், பணிந்துள்ளது விஜயின் சர்கார் தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை என்று கூறியுள்ளார்.
மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.




