சென்னை: கஜா புயல் நவ.15ஆம் தேதி முற்பகல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியது…
தற்போது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ., தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 15ம் தேதி முற்பகலில் கரை கடக்கக் கூடும். அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும்.
அப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். 12ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 12ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். நவ.14ஆம் தேதி இரவு வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும். நவ.15ஆம் தேதி அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது, தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்பதைக் குறிப்பிடாது. அந்த எச்சரிக்கை நிர்வாக ரீதியிலானது,.,, என்றார் அவர்.
முன்னதாக, வங்கக் கடலில் கஜா புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதை அடுத்து ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அறிவித்தது. மறுஉத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.




