மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மதுரையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாலமேட்டை அடுத்த சத்திரவெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மதுரை வீரன். மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியான இவர் இன்று காலை வழக்கம்போல், தன் வீட்டின் முன் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
திடீரென நிகழ்ந்த தாக்குதலால் நிலை குலைந்த மதுரைவீரன், ரத்தம் அதிகம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் கூலிப்படையை ஏவி மதுரை வீரனைக் கொலை செய்ததாகக் கூறப் படுகிறது. ஜோதிமணி மற்றும் கூலிப்படையினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





