சுங்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்

 
 
சென்னை எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி சாலையில் ராணி மெய்யம்மை அரங்கில் செயல்பட்டு சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் நேற்று (26-12-2015 ) தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
 
நேற்று காலை 7 மணியளவில் சுங்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் 3–வது மாடியில் கரும்புகை வெளியேறியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 
தகவலின் பேரில், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்களான விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 30–க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
 
கடந்த 2 தினங்களாக அரசு விடுமுறை என்பதாலும், காலை நேரத்தில் நடந்ததாலும் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் ஸ்கை லிப்ட் எனப்படும் உயரமான ஏணி கொண்டு ஜன்னல் வழியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
பின்னர் ஊழியர்கள் வந்து கதவை திறந்ததால் வீரர்கள் அறைக்குள் சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்கள் மற்றும் சேர் உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்கள் எரிந்து முழுமையாக நாசமாயின.
 
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம ஆசாமிகள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் எழும்பூர் காவல் நிலையத்திவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.