விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

 
விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலையை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற விழாவில்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டார் .
 
விழாவிற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அழகு முத்துக்கோன் தபால் தலையை வெளியிட்டனர். அதனை தபால்துறை அதிகாரி சார்லஸ் பெற்றுக்கொண்டார்
 
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விழாவில்
பேசியதாவது :–
 
அழகு முத்துக்கோன் போன்ற விடுதலை வீரர்களின் பெருமைகளை நன்கு அறிந்துள்ளேன். இவரை போல நமது தேசத்துக்காக பாடுபட்ட விடுதலை வீரர்கள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரின் பெருமைகளை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பறைசாற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் விடுதலை வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களது சாதனைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
 
உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் பிரதமர்களில் நரேந்திர மோடிக்கு தனி இடம் உள்ளது. இன்னும் 5 வருடங்களில் இந்தியாவை வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேர்த்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் புகழை உலகமெங்கும் கொண்டு சென்ற பெருமை பிரதமர் மோடியையே சாரும். அழகுமுத்துக்கோன் புகழ் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பப்படும் என்று இங்கே நான், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
 
 
விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
 
தற்போது விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியிடுவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் பெருமை அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்துக்கே பெருமையான விஷயம். அவர் நாட்டுக்காக வாழ்ந்ததை விட தர்மம் எப்போதும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். யாதவர் சமூகத்தினர் எப்போதும் நன்றிக்கு இலக்கணமாக இருக்கக்கூடியவர்கள்.
 
வருகிற தை திருநாளில் நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடக்கும். நடக்கும்… நடக்கும்… அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு சில சட்டச் சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கின்றன. அவை சரி செய்யப்பட்டு வருகிற பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கான முயற்சியில் தான் நாங்கள் இப்போது இறங்கி உள்ளோம் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
 
விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் முரளிதரராவ் பேசியதாவது:–
 
 
பிரதமர் மோடி தேச தியாகிகளை கவுரவப்படுத்தி வருகிறார். இந்த அரசுதான் தியாகிகளை கவுரப்படுத்தும் அரசாக இருக்கிறது. பசு மிகவும் புனிதமானது. பசுவையும் பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்குள்ள தடை நீங்க பிரார்த்திக்கிறேன் என்றார்.
 
இவ்விழாவில், பூபேந்தர் யாதவ் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.