ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 4 பேர் பலி, 100 பேர் படுகாயம் : பொதுமக்கள் பீதி

 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை உலுக்கியது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கி இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில்
89 பேரும், ஆப்கானிஸ்தானில் 12 பேரும் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.44 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே 203 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டி ருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிக்கு ஓடி வந்தனர்.

இதனால் பீதி அடைந்த மக்கள் நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தெரியாமல் இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் படுகாயமடைந்தவர்கள் பெஷாவர், லாகூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கில்ஜிட்– பலுகிஸ்தான் மாகாணத்தில் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என முதல்–மந்திரி ஹபீஷ் ஹபீசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.