spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?படமெடுக்கும் பாம்போடு பக்தி கொள்ளும் சிராலா மக்கள்!

படமெடுக்கும் பாம்போடு பக்தி கொள்ளும் சிராலா மக்கள்!

- Advertisement -

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாக பாம்பை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது.

பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. பாம்பு வழிபாடு கீழ்கண்ட நன்மைகளைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

  1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.
  2. வாழ்வில் வளம் பெருகும்.
  3. நோய்கள் குணமாகும்.
  4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்.
  5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள். அதிலிருந்து விடுபட பாம்பு வழிபாடு அவசியம்.

தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன. அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள சிராலா கிராம மக்கள் நாகபஞ்சமி நாகசதுர்த்தியை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள்.

சிராலா ஒரு பெரிய கிராமம். இங்கு நாகபஞ்சமி தினத்தன்று நாகபாம்பின் உருவ சிலையை வழிபடாமல், தங்கள் கைகளாலேயே பிடித்த உயிருள்ள பாம்புகளையே வழிபடுகின்றர்.நாகபஞ்சமிக்கு பத்து நாள்களுக்கு முன்பே விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு அருகில் உள்ள மலைப்பகுதிகளுக்குச் சென்று பாம்புகளை உயிருடன் பிடிக்கிறார்கள். எல்லா பாம்பாட்டிகளைப் போல சிராலா கிராம மக்கள் பாம்புகளின் விஷப்பற்களைப் பிடுங்குவதில்லை. குறிப்பாகப் பாம்புகளுக்கு எந்தவொரு துன்பத்தையும் கொடுப்பதில்லை.

நாகபஞ்சமி தினத்தன்று விடிவதற்கு முன் குளித்து, பலத்த ஆரவாரத்துடன் பாம்புகளை அடைத்த மண்பானைகளை ஆண்கள் தங்கள் தலையில் சுமந்து கிராமத்து அம்மன் கோயிலுக்கு இசைக்கருவிகள் முழங்க எடுத்துச் செல்கிறார்கள். கிராமத்துக் குழந்தைகள் விஷமற்ற பாம்புகளை தங்கள் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டு குதூகலத்துடன் ஊர்வலத்தில் கலந்துகொள்கின்றனர்.

பெண்மணிகள் தங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு பொரியை வாரி இறைத்து, நறுமணப் புகையை காட்டி, பயபக்தியுடன் வணங்கி நாகராஜனின் நல்லாசியை வேண்டுகின்றனர். இதனால் பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள், குழந்தை பாக்கியம் பெறுவர் என்பது அவர்களுடைய நம்பிக்கை .

அன்று மாலை இதற்கென்று அமைக்கப்பட்டுள்ள ஒரு விசேஷ அரங்கத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாகபாம்புகள் கொண்டு வரப்பட்டு, அவைகளை வெளியில் திறந்து விடுகிறார்கள். தாங்கள் பிடித்த பாம்புகளின் திறமைகளைக் காண்பிக்க கூழாங்கற்கள் போடப்பட்ட பானைகளை அவைகளுக்கு முன்னும் பின்னும் ஆட்டி ஒலி எழுப்ப, அவை அதற்கேற்றாற்போன்று படமெடுத்து ஆடும். இந்த மெய்சிலிர்க்கும் காட்சிகள் பெருத்த ஆரவாரத்துடன் நடைபெறும். அந்த நாகங்களும்  ஏதும் செய்யாமல் சாதுவாக நடந்துகொள்ளும்.

மறுநாள் காலை, ஆண்கள் பாம்புகளைக் கூடுமான வரையில் அவற்றை எந்த இடங்களில் பிடித்தார்களோ அந்த இடங்களுக்கு அருகிலேயே கொண்டு போய் விட்டு விடுவார்கள். பாம்புகளை வெளியே விட்டதும் அவற்றின் முன், பால், தேங்காய் சாதம், சப்பாத்தி போன்ற உணவு வகைகளைப் படைத்து, இருகரம் குவித்து வணங்கி அடுத்த நாகபஞ்சமி அன்றும் தங்கள் பூஜையை ஏற்க வந்து தங்களை கவுரவிக்குமாறு பயபக்தியுடன் வேண்டிக் கொள்கிறார்கள்.

இவ்விதமாக, சிராலா கிராம மக்கள் நாகபஞ்சமியை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் பழக்கம் எப்படி வந்தது? இதற்குக் காரணமாக, பல கதைகளையும் இவர்கள் சொல்கிறார்கள்.

உண்மையில் இந்த பிரதேசத்தில் ஏராளமான பாம்புகள் இருக்கின்றன. இரவில் நடமாடும் மக்கள் தடியும் விளக்கும் கொண்டு வருகிறார்கள். பாம்பு வழிபாட்டில் பிரசித்தி பெற்றுத் திகழும் இந்த சிராலா கிராமத்தில் “நாகபஞ்சமி’ மிகவும் முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சிராலா கிராமத்து மக்களுக்கு கடவுள் தான் பாம்புகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றி வருகிறார் என்பது கண்கூடான நம்பிக்கையாகும். பாம்புக் கடியினால் இங்கு இறந்தவர்கள் யாரும் இல்லை என்பது பெரிய ஆச்சரியம்! இந்த பாம்பு வழிபாடு மிகவும் பழைமையான வழிபாடாகத் தொடர்ந்து இன்றளவும் திகழ்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe