
குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளில் இருந்து, அவர்களை பாதுகாக்கவும் அச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும், பிரத்யேக நீதிமன்றங்களை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று(ஜூலை 25) பிறப்பித்த உத்தரவு: குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.
இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இதற்காக, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், ‘போக்சோ’ பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பாக, ஒரு ஆண்டுக்கு, 100 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள் எந்தெந்த மாவட்டங்களில் பதிவாகின்றனவோ, அந்த மாவட்டங்களில் எல்லாம், இந்த பிரத்யேக நீதிமன்றங்களை, மத்திய அரசின் நிதியின் கீழ் அமைக்க வேண்டும்.

இந்த நீதிமன்றங்களை, 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும். வழக்குகளில் ஆஜராவதற்கு, சிறப்பு பயிற்சி பெற்ற வக்கீல்களை நியமிக்க வேண்டும்.
இத்தகைய வழக்குகளில், தடயவியல் அறிக்கைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



