தேசிய கல்விக் கொள்கையை தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையை தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்பதாகவும், அதற்கான காரணங்களாக தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்
அவர் வெளியிட்ட அறிக்கையில்…
என்இபி 2020இன் சிறப்பம்சங்கள்:
1. மாணவர்களுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே கற்பித்தல் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது கற்றலுக்கு அடிப்படையான தாய் மொழி அறிவை வலுப்படுத்துவதாக உள்ளது.
2. 8ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே கற்பித்தல் முறையை தேர்வு செய்யும் சுதந்திரம் தரப்பட்டுள்ளது
3. ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்ற திட்டத்தின் கீழ் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வளங்களை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி மாணவர் முன்னேற்றத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று
4. ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 25 என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியரின் தனி கவனம் அதிகரிக்க வழி கோலுகிறது இதனால் ஆசிரியர் பணியிடம் அதிகமாக உருவாக்கப்பட வழிவகை செய்கிறது …
5. கட்டணம் இல்லாமல் இலவசமாக மாணவர் திறன் வளர்க்க ஆறாம் வகுப்பு முதல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொழிற்கல்வி கற்றுத்தரப்படும்
6. 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ஏதேனும் தவிர்க்க இயலாத காரணங்களால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத போது தான் விரும்பும் படிப்பில் சேர மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு மற்றும் ஒருமுறை அந்த தேர்வை எழுதும் வாய்ப்பு அதே ஆண்டில் மாணவருக்கு வழங்கப்படும். அந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் உயர் வகுப்புக்கு சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளப்படும்
7. கல்லூரிப் படிப்பில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வகை சேர்க்கை மற்றும் வெளியேறுதல் (multiple entry and exit) அறிமுகப்படுத்தப்படுகிறது
8. கல்லூரியில் சேர்ந்த பிறகு பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத நிலையில் சில மாணவர்கள் இடைமுறிவு மேற்கொள்ளும் நிலையில் தற்போதைய நடைமுறைப்படி அவர் கல்வித்தகுதி முன்னர் படித்த +2 என்ற அளவிலேயே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் அந்த மாணவர் ஓராண்டு சான்றிதழ் பட்டயம் மூன்றாண்டுகள் முடித்திருந்தால் இளநிலைப் பட்டமும் நான்காண்டு முடித்திருந்தால் பல்துறை இளநிலை பட்டமும் வழங்கப்படும்
9. பல்துறை பட்டம் என்பது ஒரு மாணவனோ மாணவியோ கல்லூரியில் படிக்கும் சிறப்பு பாடத்துடன் (உதாரணத்திற்கு இயற்பியல் வேதியல்) தனக்கு விருப்பமான வேறு ஒன்றை (உதாரணம் இசை ஓவியம்) தன் பட்டப்படிப்பு காலத்திலேயே விருப்பப் பாடமாக படிக்க வழிவகை செய்து அதற்கான பட்டத்தையும் பெறுதல்
10. கல்லூரியில் மாணவர் சில காலம் கழித்து மீண்டும் படிக்க விரும்பினால் தான் வீட்டில் இருந்து தனக்கு விருப்பமான பிரிவில் கல்வி கற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
11 இதுவரை பணம் படைத்தவர்கள் மட்டுமே தனியார் பள்ளி கட்டணம் செலுத்தி கற்று வந்த மூன்று மொழி திட்டமானது கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்கு கற்றுத்தர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தம் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் தான் விரும்பும் வேறு ஒரு இந்திய மொழியை கற்றுத் தேறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக எதிர்காலத்தில் இந்திய நாட்டிலும் வெளிநாடுகளிலும் தன் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்
12 அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
13 ஆசிரியர்களுக்கு கூடியமட்டும் அவரவர் வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்ற பரிந்துரை செய்யப்படுகிறது
இவற்றை போன்ற இன்னும் பல சிறப்பம்சங்களை தேசிய கல்வி கொள்கை கொண்டுள்ளதால் எதிர்கால இந்தியாவை அமைக்கும் வல்லமை பெற்றுள்ளது. எனவே இந்த தேசிய கல்விக் கொள்கையை ஆசிரியர் சங்கம் முழு மனதோடு வரவேற்கிறது வரவேற்கிறது என்று தேசிய ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.கந்தசாமி தெரிவித்துள்ளார்.