தென் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
 
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், நாளை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாவது :-
 
தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தென் வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் மழை பதிவாகவில்லை. வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, தென் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
 
குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புண்டு. மேலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது