திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகனை தேர்வுக்கூடத்தில் விட்டுச் சென்றபின்னர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தனது மகன் நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்றார் கிருஷ்ணசாமி என்பவர். அவர் இன்று காலை மகனை தேர்வு மையத்தில் விட்டு விட்டு வெளியே வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த விவரம் தெரியாமல் மகன் உள்ளே தேர்வு எழுதிக் கொண்டிருந்தார் என்று கூறப் படுகிறது.
இது குறித்த தகவல் வெளியானதும், தமிழகத்தில் பெரும் சோகம் பரவியது. இதனிடையே, எர்ணாகுளத்தில் தேர்வு எழுதி வரும் கிருஷ்ணசாமியின் மகனுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கிருஷ்ணசாமியின் உடலை கொண்டுவருவது தொடர்பாக கேரள அரசுடன் தமிழக தலைமைச் செயலாளர் பேசி வருகிறார் என்று தகவல் வெளியானது.
இதனிடையே, மன உளைச்சலால் தான் கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளார் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மனிதாபிமானமே கிடையாது என்றும், தமிழக மாணவரின் தந்தை மரணம் குறித்து கேரள ஆளுநரிடம் பேசினேன்; எர்ணாகுளம் ஆட்சியர், அதிகாரிகள் அங்கே விரைந்துள்ளனர் என்றும் வைகோ அறிக்கை ஒன்றில் தகவல் வெளியிட்டார்.




