விஜயகாந்த் சூழ்ச்சியில் விழுந்துவிடாதீர்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை

சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டு வரும் சூழ்ச்சியில் தொண்டர்கள் விழுந்துவிட வேண்டாம் என்று ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் சார்பில் நேற்று (28.12.2015) தஞ்சாவூரில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் இருந்த விஜயகாந்த்தை, கூட்டத்திற்கு வந்திருந்த அவரது கட்சியினரில் சிலர் பார்க்க இயலாதபடி அவரது உருவத்துடன் இருந்த Flex Board ஒன்று மறைத்துக் கொண்டிருந்தது. இதன் காரணமாக கூட்டத்திற்கு வந்திருந்த தே.மு.தி.க-வினரே தங்களது Flex Board-ஐ கீழே இறக்கினர். இதை மேடையிலிருந்து பார்த்த விஜயகாந்த், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான் அவரது Flex Board – ஐ அகற்றுகின்றனர் என தவறாகக் கருதி, தனது தொண்டர்களைப் பார்த்து கூட்ட இடத்தை ஒட்டி இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருந்த எனது உருவப் படத்தை அகற்ற உத்தரவிட்டு அதன்படி தேமுதிக தொண்டர்கள் எனது படத்தை அகற்றி உள்ளனர்.

இந்தப் பிரச்னையினால் உணர்ச்சி வசப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள்,, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த உள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகவும் கண்ணியமான மக்கள் பேரியக்கமாகும். தேமுதிக தொண்டர்களைப் போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய அவசியம் நமது கழக உடன்பிறப்புகளுக்கு இல்லை. நமது ஒரே குறிக்கோள் மக்கள் தொண்டாற்றுவது தான். மக்கள் தொண்டில் எப்போதும் ஈடுபட்டுள்ள பணிகளிலிருந்து நம்மை திசை திருப்பி மக்களிடம் நமக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேமுதிக தலைவரும் அவரது தொண்டர்களும் செயல்பட்டுள்ளனர். அவர்களது சூழ்ச்சிக்கு கழக உடன்பிறப்புகள் இரையாகி விடக்கூடாது என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேமுதிக-வுக்கு மக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடம் புகட்டுவார்கள். எனவே, அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும், நாம் நம்முடைய கண்ணியத்திலிருந்து இம்மியளவும் பிறழ்ந்து விடக் கூடாது. பேரறிஞர் அண்ணா மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் செயல்படும் நமது இயக்கம் எப்போதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றையே உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட வேண்டும். எனவே கழக உடன்பிறப்புகள் விஜயகாந்த் உருவ பொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களது செயலுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யும் என விட்டு விட்டு தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

– என்று கூறியுள்ளார்.