சர்கார் பட விளம்பரங்களில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி அமைந்த போஸ்டர்கள் கேரளாவிலும் பரவலாக ஒட்டப்பட்டது. பெரிய அளவில் பேனர்களும் வைக்கப்பட்டன.
இது, சமூகத்தில் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதென்று கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டத்தின் சுகாதாரத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், விஜய் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய் மீது கேரளாவில் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடன் கேட்கப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்:-
கேரள அரசு செய்தது சரிதான். இதை இனி உணர்ந்து தம்பி விஜய் இந்த மாதிரி காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவர் மட்டுமல்லாமல் எல்லா நடிகர்களுமே தவிர்க்க வேண்டும். இதற்கு எல்லாம் முன்மாதிரியாக நமக்கு எம்.ஜி.ஆர் இருந்தார். அக்கறையோடு சொல்கிறேன். அதை பின்பற்ற வேண்டும்.
மேலும் சீமான் கூறும்போது, சினிமா டிக்கெட் அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சினிமா டிக்கெட் பற்றிய கேள்விக்கு “ரூ.600 கோடி செலவுசெய்து, 150 ரூபாய் டிக்கெட் விலைவைத்து எப்படி அதை வசூலிக்க முடியும்.
அங்கேயே உங்கள் நேர்மை செத்துப் போகுது. அப்போ நீங்கள் வந்தால் ஊழலை ஒழிப்பேன். லஞ்சத்தை ஒழிப்பேன்னு எப்படிச் சொல்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். ரஜினி நடிப்பில் 600 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கும் 2.O படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.




