தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான விழா, திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத் திருவிழா. தென்னகம் சிறக்க தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சைவ உலகம் போற்றிக் கொண்டாடும் திருவண்ணாமலை, இப்போது பக்தர்களின் விழாவில் இருந்து அரசு அதிகாரிகளுக்கான விழாவாக மாறி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. நவ.20 நேற்று மகாரதம் தேரோட்டத்தை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வரும் 23 ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு அண்ணா மலையார் கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோயிலுக்குள் இருந்தபடி காணவே பக்தர்கள் விரும்புவார்கள். முன்னர், இதற்காகவே கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய, ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வந்தது. இதில் ஊழலும், குளறுபடியும் நடந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி கோயிலுக்குள் இருந்து சாமி தரிசனம் செய்தவற்கு முதல் உரிமைதாரர்கள் காலம் காலமாக கோயிலுக்காக பல பணிகள் செய்து வரும் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர்கள் முக்கியமானவர்கள். அதற்கடுத்து அரசு கெஜட்டின்படி அரசு உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த கோயில் நிர்வாகத்தால் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதிலும் கட்டளைதாரர்கள் உபயதாரர்கள் பெயரில் கோயில் நிர்வாகமே பாஸ்களை அச்சடித்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கியது! கோயில் பணியாளர்கள் பலர் அதை ஆயிரம் ரெண்டாயிரம் என வெளியே விற்று காசு பார்த்தனர்.
இந்நிலையில் பாஸ் வழங்குவதில் இந்த ஆண்டு ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரே பாஸ்களை வழங்குவது என முடிவு செய்யப் பட்டு, ஆட்சியர் கந்தசாமி பாஸ்களை வழங்குவதாகக் கூறினர் அதிகாரிகள்
ஆனால் இந்த முறை அதிலும் குளறுபடிகளும் பிரச்னைகளும் ஏற்படுள்ளது. இது குறித்து விசாரித்த போது, அடையாள அட்டையை நானே பிரித்து வழங்குகிறேன் என மொத்தமாக ஆட்சியரே வாங்கிக்கொண்டார். அதன்படி கோயில் நிர்வாகத்துக்கு என 100 பாஸ்களை மட்டுமே வழங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் இணை ஆணையர், துறை ஆணையரிடம் பேசினார். அவர் ஆட்சியரிடம் பேச, அதன்பின் கூடுதல் பாஸ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறைக்கும் இவ்வளவு அடையாள அட்டை என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தருகிறாராம்!
இந்நிலையில், இந்த வருடக் குளறுபடிகள் குறித்துப் பேசிய இந்து அமைப்பினைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், தீபத்திருவிழா என்பது கடந்த 10 வருடங்களாக அரசு அதிகாரிகளுக்கான விழாவாக மாறிவருகிறது. கார்த்திகை தீப கொடியேற்றத்துக்கும் கோயிலுக்குள் பாதுகாப்பு என்கிற பெயரில் பக்தர்களை அனுமதிப்பதில்லை! தீபத்தன்று படுமோசம். திரும்பிய பக்கமெல்லாம் போலீஸார்தான்! போதாக்குறைக்கு அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும்தான் ஆக்கிரமித்திருப்பார்கள். பக்தர்களோ பாவம்… ரூ.500 கட்டணம் செலுத்தி வருபவர்கள்! ஏழை பக்தர்களை இங்கே தேடுவது அரிதினும் அரிது!
தற்போது பாஸ்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியரே எடுத்துக்கொண்டாராம். இதனால் ஊழியர்கள் அதிக விலைக்கு விற்பது குறையும் என்கிறார்கள். ஆனால், அந்த பாஸ்கள் அனைத்தும் தற்போது அதிகாரிகளுக்கே போகும் என நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. தீபம் காண வரும் அதிகாரிகளுக்காக, மாவட்ட வருவாய்த் துறை, காவல்துறை, நகராட்சி என அனைத்து துறைகளும் இணைந்து ஹோட்டல்கள், லாட்ஜ்களில் பாதி ரூம்களை இலவசமாக வாங்கி விடுகின்றன. ஒவ்வொரு ஹோட்டலிலும் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், நகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் இலவசமாக 3 வேளையும் சாப்பாடு வாங்கி விடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள், உயர் அதிகாரிகளின் குடும்பத்தை அவர்கள் தங்க வைக்கப்பட்ட ஹோட்டலில் இருந்து கோயில் கருவறை வரை பாதுகாப்பாக அழைத்து வர ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் போலிஸ், நூற்றுக்கும் அதிகமான கார்கள், ஜீப்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி வருபவர்கள் 6 மணிக்கு மகாதீபம் ஏற்றி முடித்ததும் 10 நிமிடத்தில் கோயிலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன்படியே நடக்கிறது! அவர்களுக்காகவே போலீஸார் வேலை செய்கின்றனர். பக்தர்கள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. இதற்காகத்தான், தீப விழா குறித்த கூட்டங்களை இங்கே மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
தீபத்திருவிழாவை நடத்துவது, கட்டளைதாரர்களும் பக்தர்களும் இணைந்துதான்! ஒழுங்குப்படுத்துவது மட்டுமே நிர்வாகத்தின் பணி. திருவிழா செலவுகளை கட்டளைதாரர்களும், உபயம் செய்பவர்களும், பக்தர்களுமே கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை ஏற்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தீப தரிசனத்தில் முன்னுரிமை இல்லை. அதிகாரிகளுக்கே கடந்த காலத்தை விட இனி அதிக முக்கியத்துவம் கிடைக்கப் போகிறது. அதிகார வர்க்கம், தீபத் திருவிழாவை தங்களுக்கான விழாவாகவே முற்றிலும் மாற்றிவிட்டார்கள்! இதைத்தான் தற்போதைய நடைமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதனால்தான் சொல்கிறோம்… அரசே ஆலயங்களை விட்டு வெளியேறு என்று! அறநிலையைத்துறையைக் கலைத்து விடச் சொல்கிறோம். அறநிலையத் துறையின் பிடியில் இருந்து ஆலயங்களை மீட்கும் நேரம் இது என்று பொருமித் தள்ளுகிறார்கள் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்!
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் தீபத் திருவிழாவுக்கு டிக்கெட் பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ரூ.500 க்கான டிக்கெட்டை இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம் என்றார்கள். இத்தனை டிக்கெட்கள் போக, இந்தக் கட்டுரை பதிவு செய்யப் படும் நவ.21 மாலை வரை இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், தற்போதும் டிக்கெட்கள் பதிவு செய்யப் பட்டு வருவது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைகிறது. https://www.arunachaleswarartemple.tnhrce.in அண்ணாமலையார் ஆலய தீபத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுக்கான வலைத்தளம் இது!
மொத்தம் 3 ஆயிரம் பேர்தான் உள்ளே அனுமதி என்கிறார்கள். அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் அதிகாரிகள், குடும்பத்தினர், போலீஸார் என்று வந்துவிடும். மேலும் 500 பேர் வரை நீதிபதிகள் குடும்பத்தினர், அதிகாரிகள் என்று வந்துவிடும். இப்போது போய்க் கேட்டபோது, டிக்கெட் ஃபுல் என்று சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டார்கள். என்றோ டிக்கெட்கள் ஃபுல் ஆகிவிட்டது என்றுதான் அலுவலகத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இணையதளத்தில் இன்னும் டிக்கெட்கள் இருப்பதாகவும், வாங்கிக் கொள்ளலாம் என்றும் இருக்கிறது. இந்த இணையதளத்தை நடத்துவது யார்? அறநிலையத்துறை! அப்படி என்றால், அறநிலையத்துறைக்கு கோயிலின் நிலவரம் தெரியாதா? இது என்ன தனிக் கொள்ளை என்றுதான் தோன்றுகிறது!
பரணி தீபம் என்பதற்கு, காலை 3 மணி முதல் 4 மணி வரை என்று நேரம் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுபோல், மகா தீப தரிசனத்துக்கு மாலை 3 மணி முதல் 4 மணிவரை போட்டிருக்கிறார்கள். இது உள்நுழையும் நேரம்!
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் (நவ.21 மாலை 6.15க்கு) இடைப்பட்ட நேரத்தில் திடீரென 3வது எண்ணாக, ஸ்பெஷல் மகா தீபம் என ரூ.600க்கான பிரிவு சேர்க்கப்பட்டது. அதுபோல், பரணி தீபத்துக்கு 210, மகா தீபத்துக்கு சுமார் 414 ஸ்பெஷல் மகாதீபத்துக்கு 33 என்று டிக்கெட்கள் இருந்தன.
இதைப் பார்க்கும் போது, ஏதோ கோல்மால் நடப்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. எல்லாம் அண்ணமலையாருக்கே வெளிச்சம்!