சேதமுற்ற 1,096 கி.மீ., நீள சாலைகள் சீரமைப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை:
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த 1,096 கி.மீட்டர் நீள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

மழை வெள்ளத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 2 ஆயிரத்து 626 கி.மீ. சாலைகள், 143 தரைபாலம் மற்றும் சிறுபாலங்கள் சீரமைப்பு பணிகளுக்காகவும், 119 மண் சரிவு இடங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காகவும், ரூ.150 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நடைமுறைகளை பின்பற்றி சாலை சீரமைப்புப் பணிகளை இந்த மாதத்துக்குள்ளாகவும், 7 இடங்களில் தரைப் பாலங்கள் அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர ஆயிரத்து 96 கி.மீ. சேதமடைந்த சாலைகள் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளன.

பெரும் மழையினால் மாநிலம் முழுவதும் சாலைகளில் ஏற்பட்ட 109 உடைப்புகளில் 107 இடங்களில் உடைப்புகள் சரிசெய்யப்பட்டு சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அல்லாடு – மனோபுரம் சாலையில் மழைவெள்ளம் இன்னும் வடியாத நிலையில் படகு மூலம் மக்கள் போக்குவரத்து ஏதுவாக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து சென்னை பழவேற்காடு சாலை வழியாக 3 கி.மீ. கூடுதல் தொலைவுடன் மாற்றுப்பாதையில் செல்கிறது. கடலூர் மாவட்டத்தில் நரிமேடு பகுதியில் அருகிலுள்ள உயர்மட்டப்பாலத்தின் வழியாக போக்குவரத்து செல்கிறது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வெள்ளநீர் வடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 701 சிறுபாலங்கள், தரைபாலங்களிலும், மண் சரிவு மற்றும் ஆழமாக அறுந்தோடிய 254 இடங்களிலும் உடனடி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அன்றே தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பிஞ்சிவாக்கத்தில் வெள்ளநீர் வடிந்துள்ளதால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், முடிக்கப்பட்டு இலகுரக வாகன போக்குவரத்து தொடங்கப்படும்.

மேலும், திருவள்ளூரில், கனகம்மாசத்திரம் – தக்கோலம் சாலை மற்றும் திருத்தணி நாகலாபுரம் சாலையில் வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில் தற்காலிக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 2 மீ விட்டம் கொண்ட குழாய்களை (ஒவ்வொன்றும் 13.5 டன் எடை கொண்டது) 25 வரிசைகளில் அடுக்கி 12 மீ அகலத்திற்கு தற்காலிக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக, 2 பொக்லைன் எந்திரங்கள், 1 ஜே.சி.பி. எந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் இந்த வாரத்திற்குள் முடிக்கப்படும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.