முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்த முன் வருமா ? : விஜயகாந்த்

 
முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா ? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிதாவது +-
கடலூர் மாவட்டத்தில், தற்போது கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஜெயலலிதா நேரில் வந்தாரா? தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவாயிற்று?
தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் தான் உள்ளது.மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம், பெருமாள் ஏரிகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படவில்லை.மேலும் கடலூர் மாவட்டஆட்சியரோ வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சாப்பாடு போட்டதற்கே ரூ.40 கோடி செலவாகிவிட்டது என கணக்கு காட்டுகிறார்.இவர் ஜெயலலிதாவை மிஞ்சிவிட்டாரா எனத் தெரியவில்லை.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது போல், முதலமைச்சர் ஜெயலலிதா முதல் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வரை அனைவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்த முன்வருமா? என விஜயகாந்த் வினா எழுப்பியுள்ளார்.