திமுக., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிறது: கருணாநிதியின் அழைப்பு காரணம்?

சென்னை:

கருணாநிதியின் அழைப்பு காரணமாக, காங்கிரஸ், திமுக., இடையே பேரவைத்தேர்தலில் கூட்டணி உறுதியாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இப்போது மீண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.

இதற்கு அச்சாரமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தொனியில், கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பினாலும் தேர்தலில் கூட்டணி தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் மதசார்பற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் இது பற்றி காங்கிரஸ் மேலிடம்தான் இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம் பெறும் என தெரிகிறது. தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார். எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி வருகிறது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்க்க விஜயகாந்திடம் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏழுந்துள்ளது.