புதிய தலைமுறை பேட்டி எதிரொலி: நாஞ்சில் சம்பத் திடீர் நீக்கம்

சென்னை:
புதிய தலைமுறை டிவியில் கொடுத்த பேட்டியின் எதிரொலியாக, நாஞ்சில் சம்பத் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.

நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் மது விலக்கு பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நாஞ்சில் சம்பத் தமிழகத்தில் மது விலக்கு அமல் படுத்த வேண்டுமானால் மக்கள் அனைவரும் மேலும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக நாஞ்சில் சம்பத்தை அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. மேலும் பல சர்ச்சைக்குரிய பதில்களை அவர் அளித்தார் என்றும், சொந்த கட்சிக்கு எதிராக அவரது கருத்துகள் அமைந்தது என்றும், பல கேள்விகளுக்கு அவர் கட்சியின் தரப்பு வாதத்தை முன்வைக்காமல் தயங்கி தடுமாறினார் என்றும் பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன.

மேலும், இன்று இரவு தந்தி டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நாஞ்சில் சம்பத்தின் பேட்டியில் சில பகுதிகளும் காலை முதல் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. அதிலும், அவர் சர்ச்சைக்குரிய பல விஷயங்களைப் பேசியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதுவும் கூட அதிமுக., தலைமையை கோபப் படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.