ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்ட இல்லம், பள்ளியை சீர்செய்யும் செலவை அ.தி.மு.க. ஏற்கும்: ஜெயலலிதா

சென்னை:

சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் இல்லத்தையும், அங்குள்ள பள்ளியையும் சீர்செய்வதற்கான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

எம்.ஜி.ஆர். நினைவாக ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கென ஒரு இல்லமும், மேல்நிலைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் இன்றும் ஒளி சேர்த்து வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மிக அதிக அளவிலான கனமழை கடந்த வடகிழக்கு பருவமழையின் போது பெய்தது. கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சில இடங்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்த பெருமழை வெள்ளத்தின் போது ‘டாக்டர் எம்.ஜி.ஆர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி’ வளாகத்தின் முதல் மாடி வரை வெள்ளநீர் புகுந்து விட்டது. அதன் காரணமாக, அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மொட்டை மாடிக்குச் சென்று, தங்களைக் காப்பாற்றும்படி உதவி கோரினர். இது பற்றிய தகவல் எனக்கு கிடைத்தவுடன் நான், தலைமைச்செயலாளர் மற்றும் அரசின் ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள இல்ல மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டேன்.

அதன்படி, இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, வெள்ளத்தில் சிக்கியிருந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டனர். அவர்கள் சத்யா ஸ்டூடியோவில் தங்கவைக்கப்பட்டனர். சத்யா ஸ்டூடியோவில் அவர்கள் தங்கி இருந்த 5 நாட்களுக்கும் சுமார் 100 பேருக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள எனது இல்லத்தில் இருந்து உணவு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அந்த இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டது.

டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டாக்டர் லதா ராஜேந்திரன் தற்போது எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் குழுக் காதொலிக் கருவி, எப்.எம். காதொலிக் கருவி, மென் பலகை மற்றும் எல்.சி.டி. ஆகியவை மிகவும் பழுதடைந்துவிட்டன என்றும், அவை புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கணினிகள், அலுவலக அறைகலன்கள், நூலகப் புத்தகங்கள் ஆகியவை சேதமடைந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். இதுவன்றி, மாவரைக்கும் எந்திரம், மிக்ஸி, குளிர்பதனப் பெட்டிகள், ஸ்டவ்கள் ஆகியவையும் புதிதாக வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சுவர், உட்புறச் சாலை, முன்வாயில் போன்ற கட்டமைப்புகளும் இந்த இல்லத்தில் சீர் செய்யப்பட வேண்டும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரால் நடத்தப்படும் டாக்டர் எம்.ஜி.ஆர். வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எனது கடமை என நான் கருதுகிறேன். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு செய்யப்படும் நன்றி கடனாகவே நான் கருதுகிறேன்.

எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர். வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான இல்லம் மற்றும் மேல்நிலைப்பள்ளி முழுவதையும் சீர்செய்வதற்கு தேவையான முழு செலவையும் அ.தி.மு.க. ஏற்கும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.