செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணை கோரி திமுக ஆர்ப்பாட்டம்: 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திமுக., சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில், கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்த பெருமழையால் விவசாயம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளினாலும், மெத்தனத்தினாலும் மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோக, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க. அரசு உயிர்ச் சேதம் குறித்த எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்காமல், திட்டமிட்டு உண்மை நிலையை மறைத்து வருகிறது.

கடந்த 15.10.2015 அன்று மத்திய வானியல் ஆய்வு மையம் தமிழக அரசுக்கு வழங்கிய தகவலின்படி, டிசம்பர்-1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வழக்கத்தைக் காட்டிலும் 112 சதவிகிதம் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்பதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருந்ததாகவும், முதலமைச்சரும் அக்கறையின்றி நடந்து கொண்ட காரணத்தினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று ஏறத்தாழ 33,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தினால்தான் வீடுகளில் வெள்ளம் புகுந்து பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் வாழ்வாதாரச் சிதைவும் ஏற்பட்டன என நீர் மேலாண்மை வல்லுனர்களும், ஊடகங்களும், ஏனைய கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். வழக்கத்துக்கு மிகவும் அதிகமாகப் பெய்யக்கூடிய மழையால் பெறக் கூடிய அதிகமான நீர்வரத்தை எதிர்பார்த்து, அதற்கேற்றவாறு கொள்ளளவைக் குறைத்து ஏரிகளைப் பாதுகாப்பதுதான் ஒரு நல்ல அரசின் கடமை.

ஆனால், கையாலாகாத அ.தி.மு.க. அரசு, முதலமைச்சரின் அக்கறையற்ற நடவடிக்கையால் மக்களுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் மிகப் பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறது.

இந்தப் பேரிழப்பு ஏற்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்தும், திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் தமிழக அரசு இதுவரை ஏன் எந்த விளக்கமும் வெளியிட முன்வரவில்லை என்பது குறித்து விசாரிப்பதற்கு தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றினை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநரிடம் கருணாநிதி நேரடியாகச் சென்று வழங்கிய மனுமீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும்:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் உயிரிழந்த, உடைமைகளை இழந்த, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும் உடனடி நிவாரணம் வழங்கிடவும், மத்திய அரசு இதுவரை ரூ.1,939 கோடி உதவி நிதி அளித்துள்ளது.

மேலும், கர்நாடக அரசு, ஆந்திர அரசு, ஒரிசா அரசு, உத்திரபிரதேச அரசு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் உதவிநிதி வழங்கியுள்ளன. அத்தோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கியுள்ளனர்.கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக ரூ. 1 கோடி நிதி வழங்கினார்.

அத்துடன் தலைவர் கலைஞர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அது தவிர, தனியார் நிறுவனங்கள் பலவும், பொதுமக்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த நிதியை முறையாக பாதிப்புக்கு ஆளான மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்காமல், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, வெள்ள நிவாரணம் பாதிப்புக்கு ஆளான அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி முறையாகப் போய்ச் சேருவதை உறுதி செய்ய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அவர்கள் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று இந்தப் பேரணியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

சென்னை நகருக்குள் மறு குடியமர்த்த வேண்டும்:

தமிழக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் போதிய அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு, தற்போது அடையாற்றின் கரையோரம் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதில் வேகம் காட்டி வருகிறது.

இன்னும் நான்கு மாத காலத்தில் இந்தப் பகுதிகளைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்தப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பலரும் பணிக்குச் செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த மக்களை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே மறு குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பேரணியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

– என்று மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். டி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் சற்குண பாண்டியன், கீதா ஜீவன், தமிழரசி, முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நடிகர் குமரிமுத்து, கே.கே.நகர் தனசேகரன், சேப்பாக்கம் பகுதி செய லாளர் மதன்மோகன், மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.