யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை: அருண் ஜேட்லி வாக்குமூலம்

புது தில்லி:

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஊழல் செய்ததாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறி, கேஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, நேற்று தில்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டு சஞ்சய் கனக்வால் முன்னிலையில் அருண் ஜேட்லி ஆஜராகி சுமார் 70 நிமிடங்களுக்கு தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அப்போது அவர், ‘‘தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவி வகித்தபோது நான் யாரிடம் இருந்தும் பணம் பெற்றதில்லை. தன்னுடன் பணியாற்றும் குறிப்பிட்ட ஓர் அதிகாரி மீதான சி.பி.ஐ. விசாரணையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். எனது பதவிக் காலத்தில் பெரோஸ்ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டபோது நான் பணம் பெற்றதாக கேஜ்ரிவால் கூறியது தவறானது. அந்தப் பணியை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. நான் அதில் உறுப்பினர் இல்லை’’ என்று அருண் ஜேட்லி கூறினார்.