நெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை

திருநெல்வேலி:

திருநெல்வேலியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி 21 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளையடித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதித் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர், டவுன் பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். வேறு ஓர் அறையில் அவரது தாய் மூக்கம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மாடி வழியாக மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து, மூக்கம்மாள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளார். கண் விழித்த அவர் மர்ம நபருடன் போராடியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், மூக்கம்மாளின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி, 21 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு மாடி வழியாகவே தப்பியோடிவிட்டார்.

மூக்கம்மாளின் அலறல் கேட்டு ஆனந்தவேலும், குடும்பத்தினரும் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர் அடுத்தடுத்த வீடுகளின் மாடி வழியாக குதித்து தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த மூக்கம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஆனந்தவேல் புகார் செய்தார்.

மாநகர காவல் துணை ஆணையர் ராஜன் மேற்பார்வையில், உதவி ஆணையர் சின்னையா, ஆய்வாளர் சோமசுந்தரம், போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் என கூறப்படுகிறது.