மத வன்முறையைத் தூண்டும் கருத்து: வாட்ஸ் அப் அட்மின் மீது வழக்கு

முசாபர்நகர்:

மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்துகளைப் பரப்பிய வாட்ஸ் அப் குழு மற்றும் அட்மின் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல பயன்கள் இருந்தாலும், பாதகமான அம்சங்கள் இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய சமூக வலைதளங்களை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்க கூடிய பல கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இதனால், வீண் பரபரப்புகளும் பதற்றமான சூழலும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள கந்தலா டவுன் பகுதியில் வாட்ஸ் அப்பில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக, வாட்ஸ் அப் குழு அட்மின் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அப்பகுதி நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153( மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு கேடு விளைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்) 153 ஏ, மற்றும் 295 ஏ (வேண்டும் என்றே தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.