
ஒருசில ஆயிரங்கள் கடன் பெற்ற விவசாயிகள் தாக்கப்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் இருக்கும் நிலையில் ரூ.9000 கோடி வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கும் விஜய் மல்லையா, தற்போது 3வது திருமணம் செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் சமூக வலைத்தள பயனாளிகள் கொதிப்படைந்துள்ளனர்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர உண்மையான நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் பயனளிக்கும். ஆனால் அரசு இந்த விஷயத்தில் கண்துடைப்பு நாடகம் நடத்துவதாக சமூக வலைத்தள பயனாளிகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு சமீரா தைப்ஜீ என்பவரை திருமணம் செய்த விஜய் மல்லையா பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, 1993 ஆம் ஆண்டு ரேகா மல்லையா என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது லண்டனில் தனது நீண்டநாள் காதலி பிங்கி லல்வானி என்ற பெண்ணை 3வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த பிங்கி லல்வானி, விஜய் மல்லையாவுடன் ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



