
மதுர மொழி என்றழைக்கப்பட்ட தமிழ் மொழி, மனித பாஷை என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தது என்பதை வால்மீகி ராமாயணத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்த சீதையிடம், அனுமன் பேச முடிவு செய்த பொழுது, அவளுடன் மனித பாஷையில் பேசுவதுதான் சிறந்தது, அப்பொழுதுதான் அவள் தன்னைச் சந்தேகப்படமாட்டாள் என்று நினைத்து மனித பாஷையில் பேசினான் என்றும் கண்டோம்.
அந்தக் காலக்கட்டத்தில், அதாவது ராமாயண காலத்தில் சாதாரண மக்கள் மனித பாஷயில் பேசினார்கள் என்றால் சீதையைச் சுற்றியிருந்த ராக்ஷசிகள் எந்த பாஷையில் பேசியிருப்பார்கள்?
அந்த ராக்ஷசிகள் சாமானிய மக்கள் என்ற குறியீட்டில் வருபவர்கள்தானே? குணத்தால் ராக்ஷசிகள் எனப்பட்டாலும், அவர்கள் ராவணனைப் போல சமஸ்க்ருத பண்டிதர்களாக இருந்திருக்க முடியாது.
அவர்கள் சாமானியர்களாக இருந்திருக்கவேதான், ஒரு வனத்தில் காவல் காக்கும் தொழிலுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நோக்கில் ஆராயும்போது, அந்த ராக்ஷசிகளும் தங்களுக்குள் மனித பாஷையில்தான் பேசியிருக்க வேண்டும் என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது.
சீதையிடம் பேசும்போது மனித பாஷையில் பேசியிருக்க வேண்டும். சீதையும் அவர்களுடன் மனித பாஷையில் பேசியிருக்க வேண்டும். இதில் சந்தேகத்துக்கு இடம் வைக்காமல் ஒரு குறிப்பு வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.
சீதையுடன் அனுமன் பேசும் போது, தன்னை யாரும் கவனிக்காத வண்ணம் மிகச் சிறிய உருவத்தில் இருக்கிறான். அப்பொழுது பொழுது புலராத இருட்டும் இருந்தது. ராக்ஷசிகளும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். இருப்பினும் அவனை ஓரிருவர் கவனித்திருக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு வானரம் அங்கு இருக்கிறது என்று சட்டை செய்யவில்லை. சீதையைக் கண்டு பேசிய பிறகு அனுமன் அசோக வனத்தை அழித்து எல்லோரையும் கலங்கடிக்கிறான். அப்பொழுது அவனைப் பார்த்த ராக்ஷசிகளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. அவர்கள் சீதையைக் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். யார் அந்த வானரன் ?
அவன் உன்னுடன் பேசினாற் போல இருக்கிறதே என்றெல்லாம் அவளைத் துளைக்க ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் கேட்டது எந்த மொழியில்? அது மனித மொழியில்தானே இருக்க வேண்டும்? ராக்ஷசிகள் சமஸ்க்ருதக் கல்வி பயின்றவர்களாகவா இருந்திருப்பார்கள்? அது சாத்தியமில்லை.
சீதைக்கும் மனித பாஷை தெரிந்திருந்தது என்பதால், அவளிடம் ராக்ஷசிகள் மனித பாஷையில் பேசியிருக்க வேண்டும். அதாவது மதுரம் பாஷையில் – தமிழ் மொழியில் பேசியிருக்க வேண்டும். அவர்களுக்கு சீதை பதில் சொல்கிறாள். அதுவும் மனித பாஷையில்தான் இருந்திருக்க முடியும். அது மனித பாஷை தான் என்று சொல்லும் வண்ணம் ஒரு விவரம் இருக்கிறது.
.
ராக்ஷசிகள் அனுமனைப் பற்றி சீதையிடம் கேட்டதற்கு, சீதை இவ்வாறு பதில் சொல்கிறாள்:- ’பயங்கரமான உருவத்துடன் இருக்கும் அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அவனைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. அவன் ஒரு ராக்ஷசன் என்றே நினைக்கிறேன். ராக்ஷசர்களைப் பற்றி ராக்ஷசர்களுக்குத்தானே தெரியும். அவன் யார், என்ன செய்கிறான் என்பதெல்லாம் உங்களுக்குத்தானே தெரிந்திருக்கும்? பாம்பின் கால் பாம்புக்குத்தானே தெரியும்?’
இந்த பதிலில் ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது தமிழில் வழங்குகிற பழமொழி. இதே அர்த்தத்தில் சமஸ்க்ருதத்தில் பழமொழி இல்லை. இந்தத் தமிழ்ப் பழமொழியை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்தாற் போல வால்மீகி எழுதியுள்ளார்.
“அஹீரேவ அஹே பாதம் விஜானாதி” என்கிறாள் சீதை. (வால்மீகி ராமாயணம் 5-42-9). இதை மொழி பெயர்த்தால், அஹீ – பாம்பு; ஏவ – மட்டுமே; அஹே – பாம்பினது; பாதம் – கால்; விஜானாதி – அறியும். இப்படி ஒரு பழமொழி சமஸ்க்ருத பாஷையில் இல்லை.
பழமொழி என்பதே முதுமையான மொழி, அதாவது முதுமொழி என்பதாகும். இவை என்று யாரால் உருவாக்கப்பட்டன என்று சொல்ல முடியாதபடி வழி வழியாக சொல்லப்பட்டு வருவன. பழங்காலத்திலிருந்தே இருந்து வருவதால் பழமொழிகள் என்றாகின்றன. இவை பண்டிடதர்களால் உண்டாக்கப்பட்டவை அல்ல. சாதாரண மக்களுக்கிடையே, சாமானிய மொழியில், விரிந்த பொருளைச் சுருக்கமாகச் சொல்லி வந்தவையே பழமொழிகள் என்றாயின.
பாம்பின் கால் பாம்பறியும் என்னும் இந்தப் பழமொழியில் என்ன சாமானிய மொழி இருக்கிறது என்றால், பாம்புக்குக் கால் கிடையாது. பாம்புக்குக் கால் கிடையாது என்பது பண்டிதர்களுக்குத் தெரியும். பாம்புக்குக் ‘காலிலி’ என்றும் ஒரு பெயர் உண்டு. சமஸ்க்ருத மொழியில் பாம்பைக் குறிக்கும் சொற்களிலும் கால் இருப்பதாக
ஒரு சொல்லும் இல்லை. அதனால் பண்டிதர்கள் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்க முடியாது.
ஆனால் சாதாரண மக்கள் பாம்பு வேகமாக நகர்வதைக் கண்டு கால் இருப்பதாக நினைத்திருக்கிறார்கள். ஒரு பாம்பு வந்து விட்டால், தொடர்ந்து பல பாம்புகளும் வந்து விடும். அதனால் பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாம்பின் இருப்பிடமோ, அல்லது அதன் அசைவோ, அல்லது அதன் நகர்வோ, இன்னொரு பாம்புக்குத் தெரியும் என்ற அர்தத்தில் இந்தப் பழமொழி சாமானிய மக்களுக்கிடையே எழுந்திருக்கிறது.
இவ்வாறு எழும் சொல் வழக்குகளை சமஸ்க்ருதத்தில் “லோகோக்தி” என்பார்கள். (ஆங்கிலத்தில் PROVERB எனப்படும்). லோகோக்தி என்றால் லோகத்தில்,
அதாவது உலகத்து மக்களிடையையே உருவானது என்பது பொருள். அப்படி உருவாகும் சொல் வழக்குகள் லோகத்தார் (மக்கள்) பேசும் பேச்சு மொழியில் உண்டானவை என்றும் பொருள்.
அந்தப் பேச்சு மொழி, மனித பாஷை எனப்பட்ட தமிழ் மொழியாக இருக்கவே இந்த லோகோக்திகள் தமிழில் தான் முதன் முதலில் எழுந்திருக்க வேண்டும். லோகோக்தி எனபதற்கு இணையான தமிழ்ச் சொல் ‘முதுமொழி’ என்பதாகும். மிக முந்தின காலத்திலிருந்தே இவை பேச்சு வழக்கில் இருந்து வந்தமையால்
இவை ’முதுமொழி’ எனப்பட்டன. இவற்றையே ‘பழமொழி’ என்றும் கூறுவர்.
முதுமொழி என்பது விரிந்த பொருளைச் சுருங்கச் சொல்லுதல் ஆகும் என்கிறது தொல்காப்பியம், செய்யுளியல் 170. காலங்காலமாக இருந்து வந்த முதுமொழிகள்,
குறிப்பாலுணர்த்தும் சொற்களாக இருப்பதால் அவற்றுக்கு இலக்கண அந்தஸ்து கொடுத்து, செய்யுளியலில் பாவகை, உரைநடை ஆகியவற்றை அடுத்து
குறிப்பால் மறைவாக உணர்த்தப்படும் சொற்கள் வரிசையில் வைத்துள்ளார் தொல்காப்பியர்.
குறிப்பாக உணர்த்தும் விரிந்த பொருள் என்ன என்பதனைப் பழமொழி 400 என்னும் சங்க நூலில் காண்கிறோம். பாம்பின் கால் பாம்பறியும் என்னும் பழமொழி
இந்த நூலின் 8-ஆவது பாடலாக உள்ளது.
புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் – நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்.
பாம்பின் கால் பாம்புக்கு மட்டுமே தெரியும். அது போல அறிவுடையவர்களது அறிவினை, அறிவுடையவர்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும், கல்வி அறிவற்ற பொது மக்களால் அல்ல என்பது இதன் பொருள்.
இதன் மூலம் பாம்பின் கால் என்பது ஒரு உருவகம் என்றே ஆகிறது. பாம்பின் நடவடிக்கை பாம்புக்குத்தான் தெரியும் என்ற பொருளில் வருகிறது. அதைத்தான் சீதையும், ராக்ஷசர்களின் நடவடிக்கை, ராக்ஷசர்களுக்கே தெரியும் என்கிறாள். இதன் மூலம் ராக்ஷசர்களது சுபாவம் ராக்ஷசர்களுக்கே தெரியும் என்று குறிப்பால் உணர்த்துகிறாள். ஆனால் அதை உணர்த்த, பாம்பின் கால் என்று பாம்புக்கு இல்லாத காலை வைத்து ஒரு சொல்லாட்சி எழுந்திருக்க வேண்டாமே?
அதற்குப் பதிலாக பாம்பின் குணம் பாம்புக்குத் தெரியும் என்றோ அல்லது பாம்பின் இடம் பாம்புக்குத் தெரியும் என்றோ இருந்திருக்கலாமே? இந்தச் சொல்லாட்சி வேறு எந்த மொழியில் உண்டாகி இருந்தாலும் அப்படித்தானே உருவாகி இருக்க முடியும்?
இதுவே சமஸ்க்ருத்த்தில் உண்டாகியிருந்தால், அஹே பாதம் என்பதில் பாதம் என்னும் கால் என்பதற்குப் பதிலாக, பாம்பின் நடை பாம்புக்குத் தெரியும் என்றுதானே உருவாகி இருக்க முடியும்? அதாவது ‘அஹே சலனம்’ என்றுதானே உருவாகி இருக்க முடியும்?
அல்லது அஹே கதி (பாம்பின் நகர்வு), அல்லது ’அஹே சஞ்சாரம்’ என்றுதானே உருவாகி இருக்க முடியும்? இதில் எங்கிருந்து கால் (பாதம்) என்ற சொல் வந்திருக்க முடியும்?
அப்படி ஒரு சொல் வந்திருக்கிறது என்றால், அது குறிப்பிட்ட மக்களிடையே ’லோகோக்தியாக’ பற்பல காலமாகப் பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும். ’கால்’ என்னும் அந்தச் சொல்லாட்சி இருந்தாலும், உண்மையில் அது ஒரு குறிப்புப் பொருளைத் தருகிறது என்பதைப் பழமொழி 400 மூலமாகத் தெரிந்து கொள்கிறோம்.
அதேவிதமான குறிப்புப் பொருளை, அதே சொல்லாட்சியின் மூலம், சிறிதும் பிசகாமல் அதே பழமொழியைக் கொண்டு சீதையும் ராக்ஷசிகளிடம் பேசியுள்ளதால்,
சீதை பேசின மனித பாஷை தமிழாகத்தான் இருந்திருக்க முடியும்.
வால்மீகியார் ராம காதையை, எந்தக் கற்பனையையும் கூட்டாமல், உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளார் என்பது அந்த ராமாயணத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. (வா.ரா – 1-3-2)
அதனால் சீதை என்ன பேசினாளோ அதை அப்படியே சமஸ்க்ருத்த்தில் எழுதியுள்ளார். அவள் சொன்ன பழமொழியையும் அப்படியே சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். அந்தப் பழமொழி தமிழ் வழக்கில் மட்டுமே எழுந்த லோக வசனம் ஆகும். இதனால் ராமாயண காலத்தில் சீதை போன்ற அரச குமாரிகள் முதல், கிஷ்கிந்தையின் மந்திரியான அனுமன் உள்ளிட்டோரும், லங்கையில் வசித்த ராக்ஷசிகள் வரை இமயம் முதல் தென் திசை வரை அனைவரும் தமிழ் தெரிந்தவர்களாகவும், சாதாரண மக்களிடையே தமிழில் பேசி வந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரமாக, ஒரே மக்களாக இருந்திருந்தால்தான் ஒரே பேச்சு மொழியாகத் தமிழ் கோலோச்சியிருக்க முடியும். ஒரே எண்ணங்கள், நம்பிக்கைகள் உருவாகி இருக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு பொதுவான நம்பிக்கையைக் காணலாம்.
கிரகணம் ஏற்படும் போது, அந்த நாளைய சாமானிய மக்கள் சூரியன், அல்லது சந்திரனை பாம்பு விழுங்கி விட்ட்து என்று நினைத்தார்கள். இந்த எண்ணம் சாதாரண மக்களுக்கிடையே ஏற்பட்ட எண்ணம். இது பண்டிதர்களது எண்ணமல்ல. ஏனெனில் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ப்ருஹத் சம்ஹிதையில் மக்களுக்கிடையே இந்த நம்பிக்கை இருந்தது என்று 8 பாடல்களில் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு, கிரகணம் என்பது உண்மையில் வானில் சூரிய, சந்திர, பூமிக்கிடையே ஏற்படும் நிழல்கள் என்றும், அவை கணித ரீதியில் கணிக்கப்படுகின்றன என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் ஜோதிட வல்லுனர்களுக்கும், பண்டிதர்களுக்கும் தெரிந்திருந்தாலும், ராமாயணத்தில் பல இடங்களிலும் ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போல முகம் பொலிவிழந்து இருந்தது என்று பலவாறு சொல்லப்பட்டுள்ளது. மக்களுக்கிடையே இருந்த நம்பிக்கையை ராமாயணத்திலும் பிரதிபலித்துள்ளனர். இந்த நம்பிக்கையை தமிழ்ச் சங்க நூலான புறநானூறிலும் பிரதிபலித்துள்ளனர்.
புறநானூறு 174 –இல் மாறோக்கத்து நப்பசலையார் அவர்கள் அசுரர் ஞயிற்றை மறைத்தனர். அதனால் உலகம் இருளில் முழுகியது. உலகத்தின் துன்பத்தை நீக்குமாறு அஞ்சன வண்ணன் அந்த ஞாயிற்றை வானின்கண் நிறுத்தினான் என்கிறார்.
அஞ்சன வண்ணன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும் பெயர். கிருஷ்ணனது கதையில் இப்படி ஒரு சம்பவம் வரவில்லை. எந்தப் புராணத்திலும் இப்படி ஒரு சம்பவம் வரவில்லை. ஆனால் அசுரர் ஞாயிற்றை மறைத்தனர் என்றால் அது கேது என்னும் அசுரனால், அதாவது பாம்புக் கிரகத்தால் ஏற்படும் சூரிய கிரகணத்தையே குறிக்கும். கேதுவைக் கதிர்ப் பகை என்றும், ராஹுவை மதிப் பகை என்றே ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவர்.
இந்த நம்பிக்கை ராமன் ஆண்ட வட இந்தியாவிலும் இருந்தது. சங்கத் தமிழ் வளர்ந்த தென் தமிழ் நாட்டிலும் இருந்தது என்பதைப் புறநானூறு தெரிவிக்கிறது. இதை ஆரியன் திணித்த கருத்தென்று சொல்லமுடியாதவாறு, இமயம் முதல் குமரி வரை இருந்திருக்கிறது.
இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியன் வந்தான் என்று மாக்ஸ் முல்லர் சொல்கிறார். ஆனால் ராமாயணம் நடந்து 7000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. திராவிடவாதிகள் சொல்லும் ஆரியப்படையெடுப்புக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் பொதுவான நம்பிக்கைகள், பொதுவான பேச்சு என்று இருந்திருக்கிறது.
ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரியன் இதைத் திணித்தான் என்றால், ஐரோப்பாவில் இந்த நம்பிக்கைகள் இருந்திருக்க வேண்டும். அங்கு இல்லை. இவை போல பல நம்பிக்கைகள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பொதுவாக இருந்து வந்திருக்கின்றன. இவை எல்லாம் சாதாரண மக்களிடமிருந்து உண்டானவை என்பது முக்கியமானது.
இன்னொரு உதாரணமாகக் கண் துடிப்பைச் சொல்ல்லாம். பெண்களுக்கு இடது கண் துடிப்பதும், ஆண்களுக்கு வலது கண் துடிப்பதும் நல்லது என்ற ஒரு நம்பிக்கை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது ராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும், கலித்தொகையிலும் சொல்லப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் ராமனும், சுக்ரீவனும் அக்னி சாட்சியாக நண்பர்கள் ஆன போது சீதைக்கும் வாலிக்கும், ராவணனுக்கும் இடது கண் துடித்தது என்கிறார் வால்மீகி. அந்த நட்பினால் சீதைக்கு நன்மை, வாலிக்கும், ராவணனுக்கும் தீமை என்பதை இவ்வாறு கண் துடிப்பின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.
இது போலவே சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவூரெடுத்த காதையின் இறுதியில் கண்ணகிக்கு இடது கண்ணும், மாதவிக்கு வலது கண்ணும் துடித்தது என்கிறார் இளாங்கோவடிகள். அந்த விழா முடிந்ததும் நடந்த நிகழ்ச்சிகளால், கோவலன் கண்ணகியை அடைந்தான், மாதவியை விட்டுப் பிரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.
இது போலவே கலித்தொகை 11 –இலும் தலைவன் வராததால் துன்பமுற்ற தலைவிக்குத் தோழி ஆறுதல் சொல்கிறாள். அப்பொழுது தலைவியின் இடது கண் துடித்தது, பல்லியும் ஓசை எழுப்பியது. அதனால் தலைவன் வரும் நல்ல செய்தியை இவை தெரிவிக்கின்றன என்கிறாள் தோழி.
பல்லி சொல்லுக்குப் பலன் என்று கௌளி சாஸ்திரம் என்னும் சமஸ்க்ருத நூலே இருக்கிறது. அந்த நூலைப் படிக்காமலேயே இமயம் முதல் குமரி வரை சாமானிய மக்களுக்கு பல்லி கொட்டினால் என்ன பலன் என்று தெரிந்திருந்தது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். காக்கை கரைந்த்தால் விருந்தினர் வருவார்கள் என்று பாடிய ஒரு சங்கப் புலவர், காக்கைப் பாடினியார் என்றே அழைக்கப்பட்டார். இவையெல்லாம் நிமித்தம் என்று சாதாரண மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன.
நிமித்தம் பார்த்தே பாமரர் முதல் கரிகால் சோழன் வரை செயல்களைச் செய்தனர். சீதை முதல் அசோக வன ராக்ஷசிகள் வரை நிமித்தம் பார்த்து வரப்போவதை அறிந்த பாங்கு ராமாயணத்திலும் வருகிறது.
தொல்காப்பியச் சூத்திரத்தில் (பொருளதிகாரம் 501) சொல்வன போலவும், கேட்பன போலவும் சொல்லி அமையப் பெறும் நிமித்தக் குறிப்புகள் 11 உள்ளன
என்று சொல்லப்பட்டுள்ளது. ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், பொழுது (மாலை, யாம்ம் போன்றவை), புள், நெஞ்சு என்னும் இவை
குறிப்பாக உணர்த்தக்கூடியவை என்னும் இந்தக் கருத்து, இந்தியா முழுவதும் சாமானிய மக்கள் முதல் பண்டிதர்கள் வரையில் பரவி இருந்திருக்கிறது.
7000 ஆண்டுகளுக்கு முன்னால் ராமாயண காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. ஒரே குலம், ஒரே இனம், ஒரே கலாசாரம் என்று மட்டுமல்லாமல், ஒரே மூலத்திலிருந்து மக்கள் உண்டாகி இருந்தால்தான் இப்படி நிகழ்ந்திருக்க முடியும்! அந்த மூலம் பூமியின் தென் பாகத்தில் 70,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதை மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் சாகத்தீவு இருந்தது என்று நாம் கண்டோம். அதே பகுதியில் 12,000 ஆண்டுகளுக்கு முன் முதல் சங்கம் தொடங்கியது. அந்தப் பகுதி மக்கள் முதலில் பேசிய மொழி மதுர மொழி எனப்பட்டது. அதற்குத் ‘தமிழ்’ என்ற பெயர் கொடுத்து சங்கம் வைத்து வளர்த்தபோது, கடைசியாக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம் ஆகும்.
அதில் நான்கு வர்ணத்தவர்களைப் பற்றிச் சொல்லி, அவர்களுடன் மேலும் 3 வகை மக்களையும் சொல்லியுள்ளனர். திராவிடவாதிகள் சொல்வது போல வட இந்தியாவிலிருந்து வர்ணத்திணிப்பு வந்திருந்தால், நான்கு வர்ணத்துடன் நின்றிருக்கும். ஆனால், அறிவன் (கணியன்), தாபதர் (தவசிகள்) பொருநர் என்று மூன்று வகைகள் அதிகப்படியாகச் சொல்லவே இது தென் மதுரையிலிருந்து ஆதியில் ஏற்பட்ட வழிமுறை என்று தெரிகிறது. இந்த முறை சாகத்தீவு முறையுடன் ஒத்துப் போகிறது.
– கட்டுரை: ஜெயஸ்ரீ சாரநாதன்



