ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்

சென்னை:

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘‘ஜல்லிக்கட்டு’’ போட்டியை நடத்த வழி வகை செய்யும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அரசாணை வெளியிட்டதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினை குறித்து நான் உங்கள் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு வந்தது, உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகளுக்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கும் பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் 7.8.2015 அன்று நான் உங்களிடம் கொடுத்த அறிக்கையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வமாக வழிகாண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு, தேவைப்படும்பட்சத்தில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நான் உங்களுக்கு 2015 டிசம்பர் 22–ந்தேதியன்று கடைசியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இருப்பதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு அனுமதியால் தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரிய கலாச்சார சிறப்பு மிக்க பழக்கம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது – என குறிப்பிட்டுள்ளார்.