தமிழகத்தில் 3வது அணி ஆட்சியமைக்கும் என்பது பகல் கனவு: பா.ஜ.கூட்டணியில் இருந்து விலகிய ஈஸ்வரன்

கரூர்:

தமிழகத்தில் 3 ஆவது அணி ஆட்சி அமைக்கும் என்பது பகல் கனவு என்று கூறிய கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், பா.ஜ.கூட்டணியில் இருந்து விலகுவதாக கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக் குழுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என முடிவு செய்ய மாநில துணை பொதுச்செயலாளர்கள் சக்திகோச் நடராஜ், சேலம் தங்கவேல்,பொருளாளர் கேகேசி. பாலு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதை கொமதேக வரவேற்கிறது. பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது போல சேவல் சண்டையையும் நடத்த அனுமதிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசலுடன் எத்தனாலை கலந்து விற்றால் கரும்பு விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். விரைவில் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இதில்,விவசாய கடன்கள் வட்டியில்லாமல் வழங்கும் வகையிலும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது, கொமதேக எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தோம். ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கூட்டணியினர் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டவில்லை. கலந்து ஆலோசிக்கவும் இல்லை. இனி,பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை.

தமிழகத்தில் 3-ஆவது அணி என்பது பகல் கனவு. 4 சதவீத வாக்கு எங்கள் கட்சிக்கு உள்ளது. வரும் பிப். 7 ஆம் தேதி ஈரோட்டில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் என்றார்.

பேட்டியின்போது மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் சக்திகோச் நடராஜ், சேலம் தங்கவேல்,தலைமை நிலையச் செயலர் சூரியமூர்த்தி,பொருளாளர் கேகேசி.பாலு, மாவட்டத் தலைவர் விசா சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.