ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜெயலலிதா கருத்து

சென்னை: ஆந்திர போலீஸாரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்றும், ஆந்திர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். தற்போது ஊடகங்கள், பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, ஆந்திர காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது தானா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இறந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்திருப்பார்கள் என்று கருதினாலும், செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் தேவையான அளவுக்கு மட்டுமே பலப்பிரயோகம் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. ஆந்திர அரசு உண்மை நிலையை அறிவதற்குத் தேவையான விசாரணையை நடத்திட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, காசோலையை வழங்குவார்கள். என்று கூறியுள்ளார்.